இந்தியா

தேசிய மாதிரி கணக்கெடுப்பில் கல்வியறிவில் கேரளம் முதலிடம்! ஆந்திரத்துக்கு கடைசி இடம்!

8th Sep 2020 07:37 AM

ADVERTISEMENT


புதுதில்லி: தேசிய அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் வரிசையில் தொடர்ந்து கேரளம் முதலிடம் பிடித்துள்ளது. இப்பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் கடைசி இடம் பெற்றுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம், கடந்த ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை, 75-வது தேசிய மாதிரிக் கணக்கெடுப்பை நடத்தியது. நாடு முழுவதும் பரவலாக 8,097 கிராமங்களில் உள்ள 64,519 குடும்பங்களிலும், 6,188 நகர்ப்புறங்களில் உள்ள 49,238 குடும்பங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களின் கல்வியறிவு தொடர்பான இந்தக் கணக்கெடுப்பில் வெளிவந்த தகவல்கள் வருமாறு:

தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, நாட்டின் கல்வியறிவில் 96.2 சதவீதத்துடன் கேரளம் முதலிடம் வகிக்கிறது. தில்லி (88.7 %), உத்தரகண்ட் (87.6 %), இமாச்சல் (86.6 %), அசாம் (85.9 %) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களை வகிக்கின்றன. அதேசமயம் ஆந்திரப் பிரதேசம் (66.4 %) கடைசி இடம் பிடித்துள்ளது. அதற்கு முந்தைய இடங்களை ராஜஸ்தான் (69.7 %), பிகார் (70.9 %), தெலங்கானா (72.8 %), உ.பி. (73 %) ஆகியவை பெற்றுள்ளன.

ADVERTISEMENT

நாட்டின் ஒட்டுமொத்த சராசரி கல்வியறிவு விகிதம் 77.7 %. இதில் ஊரகப்பகுதி (73.5  %), நகர்ப்புறத்தை  (87.7 %) விட பின்தங்கியுள்ளது. மேலும், ஆண்களின் கல்வியறிவு விகிதம் (84.7 %), பெண்களின் கல்வியறிவு விகிதத்தை (70.3 %) விட அதிகமாக உள்ளது.  குறிப்பாக கேரளத்தில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் (97.4 %), பெண்களின் கல்வியறிவு விகிதத்தை  (95.2 %) விட சற்று அதிகமாக இருந்தது. மாறாக ராஜஸ்தானில் ஆண் (80.8 %)- பெண் (57.6 %) கல்வியறிவில் பெருத்த இடைவெளி காணப்பட்டுகிறது. 

கிராமப்புறங்களில் உள்ள 4 % வீடுகளிலும் நகர்ப்புறங்களிலுள்ள 23 % வீடுகளிலும் கணினியை சொந்தமாக வைத்திருந்தனர். அதேபோல, கணக்கெடுப்புக்கு முந்தைய ஒரு மாதத்துக்குள், 15- 29 வயதுக்கு உட்பட்டவர்களில் 35 % பேர் இணையவசதியைப் பயன்படுத்தியிருந்தனர். இதில் கிராமப்புறத்தில் இணையப் பயன்பாடு 25 % ஆகவும் நகர்ப்புறத்தில் இணையப் பயன்பாடு 58 % ஆகவும் இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT