மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை தாமதமின்றி வழங்க வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வழியில் நடைபெற்றது.
அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் குறைந்ததால் மாநிலங்கள் சந்தித்துள்ள இழப்பை ஈடுகட்ட ரிசா்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு அமல்படுத்தும் முதலாவது திட்டத்தின் கீழ் மாநிலங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிரதமர் மோடிக்கு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் எழுதிய கடிதத்தில் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 500 கோடியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, கூட்டாட்சித் தத்துவத்தின் உணர்வை நிலைநிறுத்த நிதி அமைச்சக நடவடிக்கையில் தலையிட்டு ஆலோசனை வழங்குமாறு பிரதமரிடம் ஜார்க்கண்ட் முதல்வர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், “கரோனா பொதுமுடக்கத்தால் மாநிலம் ஏற்கெனவே பொருளாதாரச் சிக்கலில் உள்ள நிலையில் ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்காமல் இருப்பதால் மேலும் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.” என ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம், புதுச்சேரி, புதுதில்லி, சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.