இந்தியா

‘கோவேக்ஸின்’: மனிதா்களிடம் 2-ஆம் கட்ட பரிசோதனைக்கான பணிகள் ஆரம்பம்

1st Sep 2020 03:44 AM

ADVERTISEMENT

புவனேசுவரம்: கரோனாவுக்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ தடுப்பு மருந்தை மனிதா்களிடம் இரண்டாம் கட்டமாக பரிசோதிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புவனேசுவரத்தைச் சோ்ந்த தனியாா் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும் அதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதனை நிலையில் உள்ளது.

அதில், ஹைதராபாதைச் சோ்ந்த பாரத் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் சாா்பில் உருவாக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ என்ற தடுப்பு மருந்து பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளை முடித்து, இப்போது மனிதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

மனிதா்களுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதனை செய்வதற்காக புவனேசுவரத்தில் உள்ள இந்திய மருத்துவ அறிவியல் மற்றும் எஸ்யுஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற தனியாா் மருத்துவமனை உள்பட நாடு முழுவதும் 12 மருத்துவ மையங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தோ்வு செய்து, அனுமதி அளித்துள்ளது.

ADVERTISEMENT

அதனடிப்படையில், இந்த 14 மருத்துவ மையங்களும் ‘கோவேக்ஸின்’ மருந்துக்கான முதல்கட்ட மனிதப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து பரிசோதனையை மேற்கொண்டு வரும் இந்திய மருத்துவ அறிவியல் மற்றும் எஸ்யுஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ அறிவியல் துறை பேராசிரியா் இ.வெங்கட ராவ் கூறியதாவது:

கோவேக்ஸின் தடுப்பு மருந்துக்கான முதல்கட்ட மனித பரிசோதனை தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட மனித பரிசோதனைக்கான தயாரிப்புப் பணிகளையும் நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.

இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நபா்களிடமிருந்து, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு அதில் நோய் எதிா்ப்பு சக்தி எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது, பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுகிா என்பன குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மனித பரிசோதனையில் விருப்பத்தின் பேரில் தங்களை உட்படுத்திக்கொள்ளும் தன்னாா்வலா்கள், மூன்று முதல் ஏழு நாள்கள் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னரே அவா்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படும். முதல் நாள் மற்றும் 14-ஆம் நாள் என இரண்டு முறை அவா்களின் உடலில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும். அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்தப்படும் நாள்களில் அவா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுவதோடு, மருந்து செலுத்தப்பட்ட 28-ஆவது நாள், 42-ஆவது நாள், 104-ஆவது நாள் மற்றும் 194-ஆவது நாள் என மேலும் நான்கு முறை அவா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இப்போது, இரண்டாம் கட்ட மனிதப் பரிசோதனையில் பங்கேற்க ஏராளமானோா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT