இந்தியா

நேரடியாக வழக்கு விசாரணைகளை நடத்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

1st Sep 2020 07:03 AM

ADVERTISEMENTபுது தில்லி:  கரோனா தாக்கம் காரணமாக நேரடியான வழக்கு விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ளதால் நேரடி விசாரணைக்கான ஏற்பாடுகள் தற்போது துவங்கியுள்ளன. இதற்கான நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் 25}ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் காணொலி முறையில் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியமான வழக்குகள் மட்டுமே பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வருகின்றன. எனவே, விரைவில் நேரடி விசாரணைகளைத் துவக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன. 

அதையடுத்து நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட குழுவிடம் இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே உத்தரவிட்டிருந்தார். கடந்த ஆக. 11-இல், தனது பரிந்துரைகளை இக்குழு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் அளித்தது. அதில் குறைந்தபட்சம் 3 அமர்வுகளில் நேரடி விசாரணை நடத்த, பரிசோதனை அடிப்படையில் போதிய வழிகாட்டுதல் நடைமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்ற பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணைகளை நடத்துவது தொடர்பான,  நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை உச்சநீதிமன்ற நிர்வாகச் செயலர் திங்கள்கிழமை வெளியிட்டார். எந்தத் தேதியிலிருந்து நேரடி விசாரணைகள் துவங்கும் என்று  அதில் குறிப்பிடப்படவில்லை. இரு பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பரிசோதனை முறையில் மூன்று நீதிமன்ற வளாகங்களில் நேரடி விசாரணைகளைத் துவங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பெறப்படும் அனுபவங்களின் அடிப்படையில் நேரடி விசாரணை அமர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

ADVERTISEMENT

வழக்கு விசாரணைகளின்போது வாதி, பிரதிவாதி தரப்புகளிலிருந்து பங்குபெறுவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். சமூக இடைவெளி கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படும். நீதிமன்றத்துக்குள் வழக்குரைஞர்களுக்கான இருக்கைகளும் சமூக இடைவெளியுடன் மாற்றி அமைக்கப்படும். வழக்கில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வழக்காடிகள் சார்பில் ஒரு வழக்குரைஞரும், பதிவுசெய்யப்பட்ட வழக்குரைஞர் ஒருவரும் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்களை நீதிமன்றப் பதிவாளர் தீர்மானிப்பார். பாதுகாக்கப்பட்ட பகுதியாக வரையறுக்கப்பட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் அடையாள அட்டையோ, பதிவாளரால் வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டோ வைத்திருப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும். 

நீதிமன்ற வளாகத்தில் நுழையவும் வெளியேறவும் பிரத்யேக வாயில்கள் இருக்க வேண்டும். அங்கு உடல் வெப்பநிலை பரிசோதனைக்கருவி மூலமாக வருகையாளர்கள் சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர். அங்கு கிருமிநாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.தங்கள் வழக்கு விசாரணைக்கு வரும்வரை வழக்காடிகளும் அவர்களது வழக்குரைஞர்களும் காத்திருக்கும் இடங்களில் எல்லைகள் வரையறுக்கப்படும். 

இந்த வழக்குகளுக்காக உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் 3 பெரிய அமர்வு வளாகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சாதாரணமான வழக்குகள் தற்போது நடைமுறையில் உள்ளது போலவே காணொலி முறையில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Supreme Court
ADVERTISEMENT
ADVERTISEMENT