இந்தியா

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை ராணுவ தியாகிகளுக்கு இணையாக கருத வேண்டும்: இந்திய மருத்துவ சங்கம்

1st Sep 2020 05:53 AM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களை ராணுவ தியாகிகளுக்கு இணையாக கருதுவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் 87 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 573 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறப்பு எண்ணிக்கை குறித்து மத்திய அரசு இதுவரையில் அதிகாரபூர்வமான தகவலை வெளியிடவில்லை.

எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி, நாடு முழுவதும் கரோனாவால் 307 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். 2,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 188 பேர் பொது மருத்துவர்கள் ஆவர். அவர்கள் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள். கரோனாவால் மருத்துவ சமூகத்தினர் அதிகம் பாதிக்கப்படுவதுடன், உயிரிழப்பவர்களின் விகிதாசாரமும் அதிகம்.  கரோனா நோய் பரவலின்போது மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் நாட்டுக்காக கடமையாற்றியுள்ளனர்.

எனவே, கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் தியாகத்தை ராணுவ தியாகத்துக்கு இணையாக கருதி உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி வழங்க வேண்டும். கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் வீரர்களுக்காக தேசிய அளவிலான திட்டத்தை உருவாக்க வேண்டும். இதற்காக பிரத்யேக அமைப்பை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.  

ADVERTISEMENT

மேலும், கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அடுத்த சில வாரங்களில் இந்தியா முதலிடத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மருத்துவப் பணியாளர்களின் மனிதசக்தி என்பது இன்றியமையாதது. 

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்ட விதத்தில் மாவட்டத்துக்கு மாவட்டம் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பு, மன அழுத்தம் குறித்து மாவட்ட நிர்வாகங்கள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. ஆகவே, நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்விவகாரத்தில் அரசு சரியான சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT