இந்தியா

கர்நாடகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

1st Sep 2020 05:43 AM

ADVERTISEMENT


பெங்களூரு: கர்நாடகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக,  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

கர்நாடகத்தின் பெல்லாரியில் அமைந்துள்ள விஜயநகரா மருத்துவ அறிவியல் மையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அவசர சிகிச்சைப் பிரிவை புதுதில்லியில் இருந்து திங்கள்கிழமை காணொலி வழியாக திறந்துவைத்து அவர் பேசியதாவது:

கர்நாடகத்தில் எய்ம்ஸ் (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் மையம்) மருத்துவமனையைத் தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மத்திய அரசின் நிதித் துறை ஒப்புதல் கிடைத்ததும் எய்ம்ஸ் தொடங்கப்படும். 
வாஜ்பாய் அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜின் பங்களிப்பால் நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு விரிவாக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு ஆக. 15ஆம் தேதி ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே இருந்தது. அதன்பிறகு 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. 

முந்தைய அரசால் ரேபரேலியில் மட்டும் கூடுதலாக ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் விரிவாக்கப்பட்டு, தற்போது மொத்தம் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாடு முழுவதும் உள்ளன. 

ADVERTISEMENT

கர்நாடகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. கரோனா விவகாரத்தில் கர்நாடகம் சிறந்த பணியைச் செய்துள்ளது. இதை பிற மாநிலங்களிலும் செயல்படுத்தலாம். இதுகுறித்து, மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கூட்டங்களிலும் நான் எடுத்துக் கூறியிருக்கிறேன் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT