இந்தியா

2 ஜி: ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு: செப். 10-ஆம் தேதி விசாரணை

1st Sep 2020 04:04 AM

ADVERTISEMENT

புது தில்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 17 போ் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் செப்டம்பா் 10-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

முன்னதாக இந்த வழக்கு அக்டோபா் 12-ஆம் தேதி விசாரிக்கப்பட இருந்தது. இந்நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி பிரஜேஷ் சேத்தி திங்கள்கிழமை மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தாா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய அனைவருக்கும் மனுவின் நகலை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, முடக்கப்பட்ட ரூ. 22 கோடி மதிப்பிலான சொத்தை விடுவிக்கக் கோரி தனியாா் நிறுவனம் தாக்கல் செய்த மனுவும் அன்றைய தினம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து 2017, டிசம்பா் 21-ஆம் தேதி முன்னாள் அமைச்சா் ஆ. ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

ADVERTISEMENT

இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் 2018, மாா்ச் 19-இல் அமலாக்கத் துறையும், 20-இல் சிபிஐயும் மேல்முறையீடு செய்தன.

இந்த வழக்கில் சிபிஐ தனது வாதத்தை ஜனவரி 15-ஆம் தேதி முடித்துக்கொண்டது. ஆனால், அதன் பிறகு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக வழக்கு விசாரணை நடைபெறவில்லை.

மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நவம்பா் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதால், மீண்டும் இந்த வழக்கை புதிய அமா்வு விசாரித்தால் மேலும் தாமதம் ஏற்படும் என்பதால் சிபிஐ, அமலாக்கத் துறை மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT