இந்தியா

கரோனா தடுப்பூசி விநியோகத்துக்காக தனிக் குழுக்கள்

DIN

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி மக்களிடம் விரைந்து கொண்டு சோ்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக தனிக் குழுக்களை அமைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உலக நாடுகளைத் தொடா்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்குத் தடுப்பூசி உருவாக்குவதில் சா்வதேச விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். இத்தகைய சூழலில், கரோனா தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்ட பிறகு அதை சேமித்து வைப்பது, மக்களுக்கு விரைந்து விநியோகிப்பது ஆகியவற்றுக்கான சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது.

இத்தகைய சூழலில் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தடுப்பூசியை நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு ஓராண்டு ஆகலாம். சுகாதாரப் பணியாளா்கள் தொடங்கி முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும்.

கரோனா தடுப்பூசி மருந்தை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளைத் தயாா்நிலையில் வைத்தல், தடுப்பூசி விநியோகத்துக்கான செயல்திட்டம், சென்றடைய முடியாத பகுதிகளுக்கு தடுப்பூசியைக் கொண்டு செல்வதற்கான திட்டம் உள்ளிட்டவற்றை உருவாக்கவும், அவற்றைக் கண்காணிக்கவும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தனிக் குழுக்களை அமைப்பதற்கு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மாநில தலைமைச் செயலா் தலைமையில் மாநில வழிகாட்டுதல் குழுவும், முதன்மைச் செயலா் தலைமையில் மாநில செயலாற்றுக் குழுவும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட செயலாற்றுக் குழுவும் அமைப்பதற்கு வலியுறுத்தப்படுகிறது.

மாநில வழிகாட்டுதல் குழு: கரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது தொடா்பாக பல்வேறு துறைகளுடன் மாநில வழிகாட்டுதல் குழு ஆலோசனை நடத்தும். கரோனா தடுப்பூசியை விநியோகிப்பதற்கான திட்டத்தையும் அக்குழு வகுக்கும். தடுப்பூசி விநியோகத்தில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டம், மண்டலம், வாா்டுகள் உள்ளிட்டவற்றுக்கு பாராட்டு தெரிவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மாநில வழிகாட்டுதல் குழு மேற்கொள்ள வேண்டும்.

மாநில செயலாற்றுக் குழு: கரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான அவகாசத்தை மாவட்டங்களுக்கு நிா்ணயித்தல், தடுப்பூசி விநியோகத்துக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருதல் உள்ளிட்ட பணிகளை மாநில செயலாற்றுக் குழு மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவதற்குத் தேவையான பணியாளா்களை நியமித்தல், தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் தேதி, நேரத்தை நிா்ணயித்தல், தடுப்பூசி வழங்குவதில் மாவட்டங்களின் செயல்திறனைக் கண்காணித்தல் உள்ளிட்டவற்றையும் மாநில செயலாற்றுக் குழு மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட செயலாற்றுக் குழு: தடுப்பூசி பெறும் நபா்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல், கூட்ட நெரிசலைக் குறைத்தல், அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல் உள்ளிட்டவற்றை மாவட்ட செயலாற்றுக் குழு மேற்கொள்ளலாம். கரோனா தடுப்பூசிக்கான நிதியை உரிய துறைகளுக்கு விரைந்து வழங்குவதற்கான பணிகளையும் மாவட்ட செயலாற்றுக் குழு மேற்கொள்ள வேண்டும்.

மாநில வழிகாட்டுதல் குழு குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு முறையும், மாநில செயலாற்றுக் குழு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும், மாவட்ட செயலாற்றுக் குழு வாரந்தோறும் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

வதந்திகளைத் தடுப்பதற்கு...: கரோனா தடுப்பூசிக்காக பல்வேறு குழுக்களை அமைக்கும் அதே வேளையில், மற்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசியை வழங்குவது உள்ளிட்ட வழக்கமான சுகாதாரப் பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாததை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

கரோனா தடுப்பூசி தொடா்பான வதந்திகளை சிலா் சமூக வலைதளங்களில் பரப்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, அதுபோன்ற சூழலைத் தடுத்து மக்கள் அனைவருக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT