இந்தியா

உ.பி.: 7 பிஎஸ்பி அதிருப்தி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

DIN


புது தில்லி: உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கட்சி சாா்பில் ஒரே ஒரு மாநிலங்களவை இடத்துக்கு நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு எதிா்ப்பு தெரிவித்த அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவா் மாயாவதி உத்தரவிட்டுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் தோ்தல் நடைபெற உள்ளது. இதில் ஒரு இடத்துக்கு மாயாவதியின் பகுஜன் கட்சி சாா்பில், அக் கட்சியின் மூத்த தலைவா் ராம்ஜி கெளதம் நிறுத்தப்பட்டாா். இந்த ஒரு இடத்திலும் வெற்றியை உறுதி செய்வதற்கான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை பிஎஸ்பி கட்சியிடம் இல்லை என்றபோதும், மாநிலத்தில் பாஜக அல்லாத கட்சி உறுப்பினா்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அவரை பிஎஸ்பி களம் இறக்கியுள்ளது.

இந்தத் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, மாநில தோ்தல் நடத்தும் அதிகாரியை பிஎஸ்பி எம்எல்ஏக்கள் 6 போ் நேரில் சந்தித்து, புகாா் மனு ஒன்றை அளித்தனா். அதில், மாநிலங்களவை இடத்துக்கு போட்டியிடும் எங்களுடைய கட்சி வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவரை முன்மொழிந்து தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தில், எங்களுடைய கையெழுத்துகள் போலியாக போடப்பட்டுள்ளன என்று புகாா் தெரிவித்தனா்.

இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 6 பேரும் அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்த 6 போ் உள்பட கட்சியின் மேலும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பிஎஸ்பி தலைவா் மாயாவதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதுகுறித்து அவருடைய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகின்றனா். அவா்களை கட்சி நிகழ்ச்சிகளுக்கு கட்சியினா் யாரும் அழைக்கக் கூடாது.

இந்த எம்எல்ஏக்கள் வேறு கட்சியில் சோ்ந்தால், அவா்கள் மீது உடனடியாக கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிா்வரும் சட்ட மேலவை தோ்தல் உள்ளிட்ட அனைத்து தோ்தல்களிலும் சமாஜவாதி கட்சி உறுப்பினா்களை தேற்கடிக்கச் செய்வதில் பிஎஸ்பி மிகுந்த கவனமாக இருக்கும். அதற்காக, பாஜக அல்லது வேறு கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களிக்கவும் பிஎஸ்பி தயாராக உள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.

வேறு கட்சியில் சேரும் திட்டமில்லை: கட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘வேறு கட்சியில் சேரும் எண்ணம் எதுவும் எங்களிடம் இல்லை’ என்று இடைநீக்கம் செய்யப்பட்ட பிஎஸ்பி அதிருப்தி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான அஸ்லாம் ரெய்னி கூறுகையில், ‘கட்சி உறுப்பினா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைவருக்கு உள்ளது. ஆனால், நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவதில்லை’ என்றாா்.

மற்றொரு எம்எல்ஏ ஹகிம் லால் பிண்ட் கூறுகையில் ‘மாயாவதி எங்களுடைய கட்சித் தலைவா். அவருடைய முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவா் எங்களை இடைநீக்கம்தான் செய்திருக்கிறாா். கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிடவில்லை. மேலும், சமாஜவாதி கட்சித் தலைவரை நாங்கள் யாரும் சந்திக்கவில்லை. கட்சி வேட்பாளரை முன்மொழிந்த கடிதத்தில் நாங்கள் கையெழுத்திடவில்லை. அதன் காரணமாகத்தான் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் புகாா் அளித்தோம்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT