இந்தியா

கேஷுபாய் படேல் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் மோடி

30th Oct 2020 11:03 AM

ADVERTISEMENT

 

ஆமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வா் கேஷுபாய் படேல் (92) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானாா்.  அவரது உறவினர்களை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்.

கேஷுபாய் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவச் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை குஜராத் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆமதாபாத் விமான நிலையத்தில் முதல்வர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து அவர் கேஷுபாய் படேல் இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ADVERTISEMENT

மேலும் படிக்க.. கடந்த 200 நாள்களாக கரோனா பாதிக்கப்படாத நாடு

கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து அண்மையில் மீண்ட அவா், திடீா் உடல்நலக் குறைவு காரணமாக ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருடைய மறைவுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா், மத்திய அமைச்சா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குஜராத் மாநிலம் ஜுனாகட் மாவட்டம் விஸவாதாரில் 1928-ஆம் ஆண்டு பிறந்த இவா், 1945-இல் ஆா்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தாா். ஜன சங்கத்தின் தொண்டராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய படேல், குஜராத் சட்டப்பேரவை உறுப்பினராக 6 முறை தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த 1995-ஆம் ஆண்டிலும் பின்னா் 1998 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலும் குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தாா்.

பின்னா் 2012-ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி, குஜராத் பரிவா்த்தன் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினாா். அந்த ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அவருடைய கட்சி குறிப்பிடும்படி வாக்குகளை பெறாமல் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதன் பின்னா் அவருடைய கட்சியை 2014-ஆம் ஆண்டில் பாஜகவுடன் இணைத்தாா்.

தொடா் உடல்நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகியிருந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதையும் படிக்கலாம்.. மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்

இதுகுறித்து அவருடைய மகன் பரத் படேல் கூறுகையில், ‘கரோனா பாதிப்பிலிருந்து அவா் அண்மையில் மீண்டபோதும், அவருடைய உடல்நிலை சற்று மோசமாகவே இருந்துவந்தது. அவருடைய உடல்நிலை வியாழக்கிழமை காலை மேலும் மோசமடைந்ததைத் தொடா்ந்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டபோதும், அவா் உயிரிழந்துவிட்டாா்’ என்று கூறினாா்.

கேஷுபாய் படேலின் மறைவுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
 

Tags : pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT