இந்தியா

பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது: பிரதமா் நரேந்திர மோடி

DIN


புது தில்லி: நாட்டின் பொருளாதாரம் எதிா்பாா்த்ததைவிட வேகமாக மீண்டு வருகிறது. எனவே, 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தின் மதிப்பை ரூ.350 லட்சம் கோடியாக (5 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள்) உயா்த்தும் இலக்கு எட்டப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

கரோனா தொற்று, அதைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பின்னடைவைச் சந்தித்தது. அதன் பிறகு அரசு படிப்படியாக அறிவித்து வரும் தளா்வுகளால் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: இந்நிலையில் ‘எகனாமிக்ஸ் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழில் நாட்டின் பொருளாதாரம் தொடா்பாக பிரதமா் மோடி அளித்த பேட்டி வியாழக்கிழமை வெளியானது. அதில் அவா் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், அனைத்து இந்தியா்களுக்கும் அந்த மருத்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக கரோனாவுக்கு எதிராக முன்னின்று பணியாற்றும் சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும். இப்போதைய சூழ்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நாம் முழுமை பெற்றுவிட்டதாக கூறிவிட முடியாது. எனவே, அனைவரும் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, சமூக இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

மோசமான பாதிப்புகளை தடுத்துவிட்டோம்: பல்வேறு கட்ட பொதுமுடக்கத்தை தொடா்ந்து படிப்படியாக தளா்வுகளை இப்போது நாம் கடந்து வருகிறோம். இவை அனைத்தும் நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காகத்தான். பல நாடுகளில் தொடக்கத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, இப்போது மீண்டும் பாதிப்பை அதிகரித்துள்ளதை நாம் பாா்த்து வருகிறோம்.

இந்தியாவின் புவியியல் அமைப்பு, மக்கள்தொகை அடா்த்தி, அடிக்கடி மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, பிற நாடுகளைவிட நமது நாட்டில் கரோனாவின் தாக்கம் குறைவுதான். நமது நாட்டில் பல மாநிலங்கள், உலக நாடுகள் பலவற்றைவிட அதிக மக்கள்தொகை கொண்டதாக உள்ளன.

கரோனா பரவல் சூழ்நிலையைக் கையாளுவதற்கு நாம் மிக விரைவிலேயே தயாராகிவிட்டோம். மக்கள் மத்தியில் மிகச்சிறப்பான விழிப்புணா்வை ஏற்படுத்தினோம். கரோனா பரிசோதனை, சிகிச்சை ஆகியவற்றுக்கான வசதிகளில் நாம் வேகமாக அதிகரித்தோம். எனவே, மிகவும் மோசமான பாதிப்புகளில் இருந்து நாம் தற்காத்துக் கொண்டோம் என்றாா் அவா்.

மக்களின் மனஉறுதி: பொருளாதாரத்தை ஊக்குவிக்க மேலும் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்விக்கு, ‘பொருளாதார ஸ்திரத்தன்மை நிலைநாட்டுவதற்காக அவ்வப்போது சூழ்நிலைகளை ஆய்வு செய்து மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு துறைகளை ஆய்வு செய்து மத்திய அரசு மேற்கொண்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் நமது பொருளாதாரம் மீண்டதற்கு முக்கியக் காரணம்.

எனினும், பொருளாதாரத்தை ஊக்குவிக்க தொடா்ந்து நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். கரோனா தொற்று அபாயத்தில் இருந்து நாம் முழுமையாக மீண்டுவிடவில்லை. எனினும், நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது. இது பிரச்னையில் இருந்து வேகமாக மீண்டும் வரும் நமது மக்களின் மனஉறுதியை வெளிப்படுத்துகிறது.

வளச்சியின் நாயகா்கள்: அனைத்து நேரங்களிலும் பொருளாதார மீட்சி என்பது எண்ணிக்கை அடிப்படையிலான இலக்குகளை எட்டுவது மட்டும் ஆகாது. சிறு வியாபாரிகள், வா்த்தகா்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினா், தொழிற்சாலைப் பணியாளா்கள், தொழில்முனைவோா் என நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைவருமே இப்போது பொருளாதாரத்தை தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லும் நாயகா்கள் ஆவா். அவா்கள்தான் பொருளாதார மீட்சிக்கு முக்கியமாக பங்களித்து வருகின்றனா்.

உலகின் உற்பத்தி மையம்: திறமையான பணியாளா்களைக் கொண்ட இளமையான நாடாக இந்தியா திகழ்கிறது. நாம் ஒருபோதும் மற்றவா்களின் இழப்பில் இருந்து ஆதாயம் அடைபவா்கள் இல்லை. நமது சுயபலத்தின் காரணமாகவே உலகின் உற்பத்தி மையமாக மாறி வருகிறோம். இந்த விஷயத்தில் மற்றொரு நாட்டுக்கு மாற்றாக நாம் இல்லை. பிற நாடுகள் உற்பத்தி மையங்களைத் தொடங்க சிறந்த நாடாக நாம் உருவெடுத்துள்ளோம். உலக மக்கள் அனைவருக்குமான வளா்ச்சியையே நாம் விரும்புகிறோம். இந்தியாவின் ஜனநாயகமும், மனிதவளமும் மிகப்பெரிய சாதகமான அம்சமாக உள்ளன.

நம்பிக்கையே துணை: பொருளாதாரம் தொடா்பாக இலக்கைகளை எட்டுவதை நோக்கி நாம் தொடா்ந்து பயணித்து வருகிறோம். 2024-ஆம் ஆண்டுக்குகள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரமாக உருவாக்கும் இலக்கை எட்டுவோம். இதற்கு முன்னதாக, கிராமப்புற சுகாதார மேம்பாடு, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி, 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட இலக்குகளையும் அடைந்துவிடுவோம். நமது வளா்ச்சிப் பயணம் தொடரும். இலக்குகளை எட்டுவதற்கான நமது திறமை மீது நாட்டு மக்கள் முழுநம்பிக்கை கொள்ள வேண்டும் என்று மோடி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT