இந்தியா

லடாக் பிராந்திய உரிமை விவகாரம்: மன்னிப்புக் கோரியது சுட்டுரை நிறுவனம்

ANI

புது தில்லி: இந்தியாவுக்குச் சொந்தமான லடாக் பகுதியை சீனாவுடையதாகக் கூறி வெளியிடப்பட்ட பதிவுகள் குறித்து இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் சுட்டுரை நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு வாய்மொழியாக சுட்டுரை நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான லடாக் பகுதியை சீனாவுடையதாகக் கூறி வெளியிடப்பட்ட பதிவுகள் குறித்து சுட்டுரை நிறுவனம் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றும், இந்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோர வேண்டும், இது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு தெரிவித்திருந்த நிலையில், சுட்டுரை நிறுவனம் வாய்மொழியாக மன்னிப்புக் கோரியிருக்கிறது.

அண்மையில் லடாக்கின் லே பகுதியைச் சோ்ந்த நபா் ஒருவா் சுட்டுரைப் பக்கத்தில் நேரலையில் தோன்றினாா். ஆனால், சீனாவைச் சோ்ந்த பகுதியிலிருந்து அவா் நேரலையில் தோன்றுவதாக சுட்டுரை நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இது சமூக வலைதளப் பயன்பாட்டாளா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாதுக்கு சுட்டுரைப் பதிவு வாயிலாக ஒருவா் சுட்டிக்காட்டியிருந்தாா். அதையடுத்து, லடாக் பகுதியை சீனாவுக்குச் சொந்தமானதாகக் காட்டிய சுட்டுரை நிறுவனத்தின் மீது விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு இந்த விவகாரம் தொடா்பாக சுட்டுரை நிறுவனத்தின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. அதில் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும், மத்திய சட்டத் துறை, தகவல்-தொழில்நுட்பத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனா்.

இது தொடா்பாக மீனாட்சி லேகி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘லடாக்கை சீனாவைச் சோ்ந்த பகுதியாகக் காண்பித்ததற்கு சுட்டுரை நிறுவனம் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதை கூட்டுக் குழுவின் உறுப்பினா்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனா். அதே வேளையில், இந்தியா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆனால், இது உணா்வு சாா்ந்த விவகாரம் மட்டுமல்ல. இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைச் சாா்ந்த விவகாரம். இந்தியப் பகுதியை சீனாவுக்குச் சொந்தமானதாகக் குறிப்பிடுவது கிரிமினல் குற்றமாகும். அதற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என்றாா்.

எழுத்துப்பூா்வ விளக்கம்: இந்த விவகாரம் குறித்து சுட்டுரை நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இத்தவறு நிகழ்ந்ததாகவும், அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் நாடாளுமன்றக் குழுவிடம் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது’’ என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT