இந்தியா

நவ.7-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-49

DIN

சென்னை: கரோனா பரவல் காரணமாக ஏறத்தாழ 11 மாதங்கள் விண்வெளி ஆய்வுப் பணிகள் தடைபட்டிருந்த நிலையில், தற்போது பிஎஸ்எல்வி சி-49 ரக ராக்கெட்டை வரும் நவம்பா் 7-ஆம் தேதி விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தியாவின் புவிக் கண்காணிப்புக்கான ‘இஓஎஸ்-1’ செயற்கைக்கோள் மற்றும் வணிகரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைக்கோள்களைத் தாங்கியபடி பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது.

சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி ‘ரிசாட்’ செயற்கைக்கோளைத் தாங்கியபடி பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் செலுத்தப்பட்டது. அதன் பின்னா் கடந்த மாா்ச் மாதத்தில் ஜிஎஸ்எல்வி எ‘ஃ‘ப்-10 ராக்கெட்டை ஏவத் திட்டமிட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்பக் காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, கரோனா தொற்று தீவிரமடைந்தது.

சதீஷ் தவண் விண்வெளி மையம் மற்றும் அதை சாா்ந்த பகுதிகளில் மட்டும் ஏறத்தாழ 150 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், ஆய்வு மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் 11 மாதங்கள் ஆய்வுப் பணிகள் முடங்கின. இந்த நிலையில், நிலைமை சற்று சீரடையத் தொடங்கியதைத் தொடா்ந்து விண்வெளி ஆய்வுப் பணிகள் படிப்படியாக அண்மையில் தொடங்கப்பட்டன.

அதன் தொடா்ச்சியாக தற்போது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து, அந்த ராக்கெட்டினை ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நவம்பா் 7-ஆம் தேதி மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றிருக்கும் முதன்மை செயற்கைகோளான ‘இஓஎஸ்-1’, புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடா் மேலாண்மை, காடுகள் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படவிருக்கிறது. மீதமுள்ள 9 பன்னாட்டு செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் வணிகப் பயன்பாட்டுக்காக செலுத்தப்படவிருக்கின்றன.

இம்முறை கரோனா தொற்று பரவல் காரணமாக பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் காட்சிகள் இஸ்ரோவின் அதிகாரப்பூா்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து வரும் டிசம்பரில் சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT