இந்தியா

பிகார் முதல்கட்டத் தேர்தல்: 54% வாக்குப் பதிவு

29th Oct 2020 04:25 AM

ADVERTISEMENT

 

பாட்னா: பிகாரில் 71 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவாகின.
பிகார் பேரவையில் உள்ள 243 இடங்களுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. கரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கிய பிறகு நாட்டில் நடைபெறும் முதல் பேரவைத் தேர்தல் என்பதால், அதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 
புதன்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வழக்கமாக நடைபெறும் தேர்தல்களில் மாலை 5 மணி வரையே வாக்குப் பதிவு நடைபெறும். கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு வாக்குப் பதிவுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கியது.
வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்கியதும் வாக்காளர்களின் வருகை குறைவாகவே இருந்தது. பின்னர் வாக்குப் பதிவு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக 54 சதவீத வாக்காளர்கள் முதல்கட்டத் தேர்தலில் வாக்களித்ததாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நக்ஸல் அச்சுறுத்தல்: தேர்தல் நடைபெற்ற 71 தொகுதிகளில் 35 தொகுதிகள் நக்ஸல் அச்சுறுத்தல் நிறைந்தவையாக இருந்தன. 
அதனால், வாக்குப் பதிவுக்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நேரம் குறைக்கப்பட்டது.
வாக்களித்த முக்கிய நபர்கள்: முதல்கட்டத் தேர்தலில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங், லக்கிசராய் தொகுதியில் வாக்களித்தார். பிகார் முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி, கயை தொகுதியில் வாக்களித்தார்.
மாநில அமைச்சர்களான விஜய் சின்ஹா, கிருஷ்ணானந்தன் வர்மா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனையான ஸ்ரேயஸி சிங் உள்ளிட்டோரும் தேர்தலில் வாக்களித்தனர். 
கூட்டணிகள்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணி சார்பில் நிதீஷ் குமார் முதல்வர் வேட்பாளராக உள்ளார். ஆளும் கூட்டணியிலிருந்து விலகிய லோக் ஜனசக்தி, தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.
இதுதவிர லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மகா கூட்டணியும் களத்தில் உள்ளது. இக்கூட்டணி சார்பில் லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாத் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற 71 தொகுதிகளில் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி 35 இடங்களிலும் அதன் கூட்டணியில் உள்ள பாஜக 29 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. எதிரணியான மகா கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 42 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் போட்டியிட்டன.
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது.  ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட 35 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிகாரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. மூன்று கட்டத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 10-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.


"ஜனநாயகத்தின் திருவிழா'

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "ஜனநாயகத்தின் திருவிழாவில் பங்கேற்று வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதே வேளையில், கரோனா நோய்த்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வாக்களிக்கச் செல்கையில் முகக் கவசத்தை அணிவதோடு, சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.

ADVERTISEMENT

"நீதிக்காக வாக்கு'

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், " நீதி, வேலைவாய்ப்பு, விவசாயிகள்-பணியாளர்களின் நலன் ஆகியவற்றுக்காக மகா கூட்டணிக்கு மட்டுமே இந்த முறை வாக்களிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT