இந்தியா

சூழலை திறமையாக கையாளுகிறது ராணுவம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

29th Oct 2020 03:27 AM

ADVERTISEMENT


புது தில்லி: தற்போதைய பாதுகாப்புச் சூழலை இந்திய ராணுவம் திறமையாகக் கையாண்டுவருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக ராணுவத் தளபதிகள் பங்கேற்கும் 4 நாள் மாநாடு கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் சீனாவுடனான எல்லைப் பிரச்னை, ஜம்மு - காஷ்மீர் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் இதில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
 இந்த மாநாட்டில் புதன்கிழமை பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் தற்போதைய பாதுகாப்புச் சூழலை இந்திய ராணுவம் திறமையாகக் கையாண்டுவருவது பாராட்டுக்குரியது. 
சீர்திருத்தங்களுக்கான பாதையில் ராணுவத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கும், அனைத்துவிதமான பலன்களையும் அவர்கள் அடைவதற்கு உதவிடவும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதி பூண்டிருக்கிறது.
பாதுகாப்புப் படையினரின் கரங்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேச பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் ஏற்பட்ட பல்வேறு சவால்களில் நமது படைகள் வெற்றி கண்டுள்ளன. பயங்கரவாதம், கலவரம் அல்லது எந்த ஒரு வெளிப்புற அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதில் நமது படைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன என்றார்.
கிழக்கு லடாக் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து இருதரப்பிலும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக இதுவரை நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் சூழ்நிலை சீரடையாத நிலையில், இந்திய ராணுவத்தின் உயர்நிலை தளபதி
கள் மாநாடு நடைபெற்று வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT