இந்தியா

தருண் தேஜ்பால் மீது பாலியல் புகார் விசாரணை: அடுத்த மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு

28th Oct 2020 03:03 AM

ADVERTISEMENT

தெஹல்கா பத்திரிகை நிறுவனர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
2013- ஆம் ஆண்டு கோவாவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மின்தூக்கியின் உள்ளே முன்னாள் பெண் பத்திரிகையாளருக்கு எதிராக பாலியல் தாக்குதல் நடத்தியதாக தருண் தேஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது ஜாமீன் மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி குற்றப்பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் 2014-ஆம் ஆண்டு மே மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 இது தொடர்பான வழக்கு விசாரணை கோவா மாநிலம், மபுசாவில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை இவ்வாண்டு டிசம்பர் 31-க்குள் முடித்து வைக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் விசாரணையை முடிக்க மபுசா நீதிமன்ற நீதிபதி கால அவகாசம் கோருவதாக, அவர் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். 
இந்த விவகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர். ஷா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் இப்போது ஏற்கக் கூடாது என்று தருண் தேஜ்பால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியபடி விசாரணை டிசம்பருக்குள் நிறைவடைந்துவிட்டால், கூடுதல் அவகாசம் என்பதற்கே தேவை எழாது; விசாரணை முடிவடையாத பட்சத்தில் கூடுதல் கால அவகாசத்தை அப்போது அளித்தால் போதும் என்று அவர் வாதிட்டார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், "நீங்கள் காணொலி முறையில் விசாரணையில் பங்கேற்கத் தயாராகவில்லை என்பதால்தான் வழக்கு விசாரணை தாமதம் அடைந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் ஏராளமான சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும். டிசம்பருக்குள் விசாரணை முடியாது என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது என்றனர்.
தொடர்ந்து, மபுசா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கான காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி தேஜ்பால் அளித்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT