இந்தியா

”ஆரோக்ய சேது செயலியை உருவாக்கியது யார் எனத் தெரியாது”: மத்திய மின்னணு அமைச்சகம்

28th Oct 2020 05:24 PM

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்ய சேது செயலியை யார் உருவாக்கினார்கள் என்பது தெரியாது என மத்திய மின்னணு அமைச்சகம் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நோயாளிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசால் ஆரோக்ய சேது செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பம் முதலே பல்வேறு கேள்விகளுக்குள்ளான இந்த செயலி தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் செளரவ் தாஸ் என்பவர் எழுப்பியக் கேள்விக்கு பதிலளித்துள்ள அரசாங்க வலைத்தளங்களை வடிவமைக்கும் தேசிய தகவல் மையம், ஆரோக்ய சேது செயலியை யார் உருவாக்கியது, அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பொதுமுடக்கக் காலத்தில் உணவகங்கள், சினிமா அரங்குகள், மெட்ரோ நிலையங்களுக்குள் நுழைவதற்கு முன்பு ஆரோக்ய செயலியை பதிவிறக்கம் செய்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய மின்னணு அமைச்சகத்தின் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தொடர்ந்து ஆரோக்ய சேது வலைத்தளம், அரசு இணைய பின்னொட்டுடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக வழங்குமாறு  தேசிய தகவல் ஆணையம் தேசிய தகவல் மையத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக  தகவல் ஆணையர் வனஜா என்.சர்னா தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் ஆரோக்ய சேது குறித்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆரோக்யா சேது பாதுகாப்பானது எனவும், அது எந்த தனியார் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT