இந்தியா

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரம்: ஜாமியா மாணவர் ஜாமீன் மனு தள்ளுபடி

28th Oct 2020 03:05 AM | நமது நிருபர் 

ADVERTISEMENT

வடகிழக்கு தில்லி வன்முறையில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் ஆசிஃப் இக்பால் தன்ஹாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. "தன்ஹாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முக்கியமானதாக இருப்பதுடன், அதை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளது' என நீதிமன்றம் அப்போது தெரிவித்தது. 
வடகிழக்கு தில்லியில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வகுப்புவாத மோதல்கள் வெடித்தன. குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் இடையிலான இந்த வன்முறையில் சுமார் 53 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர். 
இந்த விவகாரத்தில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஆசிஃப் இக்பால் தன்ஹாவை தில்லி காவல்துறை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி தன்ஹா தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் முன்கூட்டியே சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக மனுதாரர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்த சுதந்திரம் உண்டு. அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும். 
நியாயமற்றதாக தாங்கள் கருதும் எந்தவொரு சட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் சுதந்திரமும் உரிமையும் அனைத்து குடிமக்களுக்கும் உள்ளது. எனினும், சிஏஏ-வுக்கான எதிர்ப்பு என்ற போர்வையில் இதர வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது இந்தியாவுக்கு எதிரான அதிருப்தியை நோக்கமாகக் கொண்டது என்ற அர்த்தத்தை காட்டுகிறது. நீதிமன்ற மாஜிஸ்திரேட் மூலம் பதிவு செய்யப்பட்ட சில சாட்சிகளின் வாக்குமூலம், தன்ஹாவுக்கு எதிரான போதிய குற்றச்சாட்டை காட்டுவதாக உள்ளது. மேலும், சாட்சிகளில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், ஒட்டுமொத்த போராட்டத் திட்டமும் பிஞ்ரா தோட், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 
காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் போலியாக அடையாள ஆவணத்தை அளித்து தன்ஹா சிம் கார்டு பெற்றிருந்ததாகவும், அந்த சிம் கார்டு பின்னர் வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான சபூரா ஜர்கரிடம் வழங்கப்பட்டதாகவும், அந்த சிம்கார்டு ஜேசிசி வாட்ஸ் அப் குழுவுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தன்ஹாவுக்கு, சர்ஜீல் இமாம், நதீம் கான், ஜர்கர் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததும், வடகிழக்கு தில்லி வன்முறைக்கு வித்திட்ட சம்பந்தப்பட்ட போராட்ட இடத்தில் போராட்டத்தை ஏற்பாடு செய்ததற்கான ஒட்டுமொத்த சதித் திட்டத்தில் அவர் முக்கியமாக செயல்பட்டுள்ளதற்கும் முகாந்திரம் இருப்பதற்கான நியாயமான காரணங்கள் இருப்பதால் அவரது ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT