இந்தியா

பாகிஸ்தானியர்கள் 18 பேர் பயங்கரவாதிகள்: மத்திய அரசு அறிவிப்பு

28th Oct 2020 03:13 AM

ADVERTISEMENT

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பாகிஸ்தானை சேர்ந்த 18 பேரை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட விதிகளின்படி, பயங்கரவாத அமைப்புகளுக்கு மட்டுமே முன்பு தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பயங்கரவாத செயல்களில் பங்கேற்பது, பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிப்பது, பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் தனி நபர்களையும் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளாக அறிவிக்க அந்த சட்டம் வகை செய்கிறது.
திருத்தப்பட்ட சட்ட விதிகளின்படி, கடந்த ஆண்டு செப்டம்பரில் 4 பேரும், இந்த ஆண்டு ஜூலையில் 9 பேரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது இந்த சட்ட விதிகளின்படி மேலும் 18 பேரை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
இது தொடர்பாக மத்திய அரசின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியது: தேசப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றுக்கான கொள்கைகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து, யுஏபிஏ சட்ட விதிகளின்படி மேலும் 18 பேர் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களிலும், நாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டவர்கள்.
 பட்டியலில் இடம்பெற்றவர்கள்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு (26/11) திட்டமிட்டவர்களில் முக்கிய நபராகக் கருதப்படும், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் ஏ தொய்பா அமைப்பின் கமாண்டர் சஜீத் மீர், இந்த அமைப்பின் மற்றொரு கமாண்டர் யூசுப் முஸம்மில், இந்த அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான தலைவர் ஹபீஸ் சயீதின் மைத்துனர் அப்துர் ரஹ்மான் மக்கி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைத் தோற்றுவித்து ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட சகோதரர்கள் ரியாஸ் பட்கல், இக்பால் பட்கல், ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர்களான சோட்டா ஷகீல், முகமது அனீஸ் ஷேக், இப்ராஹிம் மேமன் என்ற டைகர் மேமன், ஜாவேத் சிக்னா, லஷ்கர் ஏ தொய்பாவின் முன்னணி அமைப்பான ஃபலா இ இன்சானியத் அமைப்பின் துணைத் தலைவர் ஷாகித் மெஹ்மூத் என்ற ஷாகித் மெஹ்மூத் ரஹ்மத்துல்லா, அக்ஷர்தாம் கோயிலில் நடந்த தாக்குதலிலும் (2002),  ஹைதராபாதில் நடந்த தாக்குதலிலும் (2005) தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி ஃபர்கத்துல்லா கோரி என்ற அபு சூபியன், 1999-இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வரும், ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் உறவினர்கள் அப்துல் ரவூப் அஸ்கர், இப்ராஹிம் அதர், யூசுப் அசார், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சலாஹுதீன், துணைத் தலைவர் குலாம் நபி கான், ஜெய்ஷ் ஏ முகமது கமாண்டர் ஷகித் லத்தீப், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் நிதி விவகாரங்களைக் கவனித்து வந்த ஜாபர் ஹுசேன் பட் ஆகியோரின் பெயர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் என்று அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT