இந்தியா

காவிரியில் தமிழகத்திற்கு கூடுதலாக 15 டிஎம்சி நீர் விடுவிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு தகவல்

28th Oct 2020 03:11 AM | நமது சிறப்பு நிருபர் 

ADVERTISEMENT

தமிழகத்திற்கு நடப்பாண்டில் காவிரியில் முறைப்படி வழங்க வேண்டிய அளவைவிட கூடுதலாக 15 டிஎம்சி தண்ணீர் விடுவிக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தில்லியில் 37-ஆவது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காணொலி வழியாக நடைபெற்றது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகம், கேரளம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

தமிழகத்தின் சார்பில் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினரும் திருச்சி நீர்வள ஆதாரத் துறை தலைமைப் பொறியாளருமான எஸ்.ராமமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர் திருவேட்டை செல்வம், காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்பிரமணியன், துணைத் தலைவர் பட்டாபிராமன் ஆகியோர் காணொலி வாயிலாக  சென்னை, திருச்சியிருந்து கலந்து கொண்டனர். 
இந்தக் கூட்டத்தில் மாநிலங்களில் அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம் போன்ற புள்ளி விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. முக்கியமாக தமிழகத்திற்கு காவிரியில் வழங்கப்பட்ட நீர் குறித்து மத்திய நீர் மேலாண்மை தரப்பில் புள்ளி விவரங்கள் முன்வைக்கப்பட்டது. 
நடப்பாண்டு ஜூன் 1- ஆம் தேதி முதல் அக்டோபர் 26- ஆம் தேதி வரை தமிழகத்திற்கு பிலிகுண்டுவில் 155.80 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுப் பிரதிநிதி தெரிவித்தார். இது முறைப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 140.09 டிஎம்சியைவிட 15 டிஎம்சி கூடுதலாகும் என மத்திய அரசு தரப்பில் புள்ளிவிரங்கள் முன்வைக்கப்பட்டன. வரும் மாதங்களில் குறிப்பாக நிகழ் நீர் ஆண்டான 2021 ஜனவரி வரை வழங்கப்பட வேண்டிய தண்ணீரையும் இதே போன்று கர்நாடகம் தவறாமல் வழங்க வேண்டும் என தமிழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதே போன்று தமிழகத்திலிருந்து காவிரி நதியில் புதுச்சேரி மாநிலம் பெற்ற நீரின் அளவு குறித்தும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. 

மேலும், வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள 10-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படவேண்டிய விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.  இந்தக் கூட்டத்தில் காவிரி நீர் பாசன பகுதிகளில் அமைக்கப்பட வேண்டிய தகவல் தொடர்பு, நீர் அளவீடுகளில் புதிய தொழில் நுட்பம் குறித்த ஆய்வு ஆகியவையும் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் இந்த குழு வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தை நவம்பர் 11 -ஆம் தேதி நடத்த  கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT