இந்தியா

பிகார் 2-ஆம் கட்ட பேரவைத் தேர்தல்: 34 சதவீத வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

28th Oct 2020 02:49 AM

ADVERTISEMENT

பிகார் சட்டப்பேரவைக்கு 2-ஆம் கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 34 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
பிகாரில் உள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக அக். 28-ஆம் தேதி 71 தொகுதிகளுக்கும், 2-ஆம் கட்டமாக நவ. 3-ஆம் தேதி 94 தொகுதிகளுக்கும், 3-ஆம் கட்டமாக நவ. 7-ஆம் தேதி 78 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2-ஆம் கட்டத் தேர்தலை எதிர்கொள்ளும் 1,463 வேட்பாளர்களில் 34 சதவீதம் பேர் அதாவது 502 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பாக வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) ஓர் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் விவரம்:

மொத்த வேட்பாளர்களில் 27 சதவீதம் பேர் அதாவது 389 பேர் மீது தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் 5 ஆண்டு சிறைத் தண்டனையுடன் கூடிய, ஜாமீனில் வெளியே வர முடியாத குற்றங்களைக் கொண்டதாகும்.

ஆர்ஜேடி வேட்பாளர்கள் 56 பேரில் 36 பேரும் (64 சதவீதம்), பாஜக வேட்பாளர்கள் 46 பேரில் 29 பேரும் (63 சதவீதம்), எல்ஜேபி வேட்பாளர்கள் 52 பேரில் 28 பேரும் (54 சதவீதம்), காங்கிரஸ் வேட்பாளர்கள் 24 பேரில் 14 பேரும் (42 சதவீதம்), பிஎஸ்பி வேட்பாளர்கள் 33 பேரில் 14 பேரும் (42 சதவீதம்), ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் 43 பேரில் 15 பேரும் (35 சதவீதம்) குற்ற வழக்குகளை எதிர்கொள்பவர்கள்.

மொத்த வேட்பாளர்களில் 49 பேர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். இவர்களில் 4 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. 32 வேட்பாளர்கள் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். 143 பேர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
ரெட் அலெர்ட் தொகுதிகள்: ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் 3 அல்லது அதற்கு மேற்பட்டோர் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அந்தத் தொகுதி "ரெட் அலெர்ட்' தொகுதியாக அறிவிக்கப்படும். அந்த வகையில், 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் 94 தொகுதிகளில் 84 தொகுதிகள் "ரெட் அலெர்ட்' தொகுதிகளாகும்.

அரசியல் கட்சிகள் குற்றப் பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்வது ஏன் என கடந்த பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. ஆனால், அதற்கு எந்தப் பலனும் இல்லை. பிகார் 2-ஆம் கட்ட தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களது பழைய நடைமுறையைப் பின்பற்றி குற்ற வழக்குகளில் தொடர்புடைய 34 சதவீதம் பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளதாக ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.

495 கோடீஸ்வரர்கள்: வேட்பாளர்களின் சொத்துப் பின்னணியையும் ஏடிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி, 1463 வேட்பாளர்களில் 495 பேர் (சுமார் 34 சதவீதம்) கோடீஸ்வரர்கள் ஆவர். பாஜக வேட்பாளர்கள் 39 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 20 பேரும், ஆர்ஜேடி வேட்பாளர்கள் 46 பேரும், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் 35 பேரும், எல்ஜேபி வேட்பாளர்கள் 38 பேரும், பிஎஸ்பி வேட்பாளர்கள் 11 பேரும் ரூ.1 கோடிக்கு அதிகமான சொத்துகளைக் 
கொண்டவர்கள்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT