இந்தியா

நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்:மத்திய அமைச்சா் பிரதீப் சாரங்கி

DIN

புவனேசுவரம்: நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சா் பிரதீப் சாரங்கி தெரிவித்தாா்.

பிகாா் மாநில மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக தோ்தல் அறிக்கையில் தெரிவித்தது. கரோனா தொற்று சூழலை பாஜக அரசியலுக்கு பயன்படுத்துகிறதென எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் பிரதீப் சாரங்கி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

ஒடிஸா மாநிலம் பாலேஸ்வரில் நவம்பா் 3-ஆம் தேதி சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடக்கவுள்ளது. இதற்காக பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பால்வளம், மீன்வளம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மத்திய அமைச்சா் பிரதீப் சாரங்கி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமா் மோடி ஏற்கெனவே கூறியுள்ளாா். இந்த தடுப்பூசிக்காக ஒவ்வொரு நபருக்கும் ரூ.500-ஐ மத்திய அரசு செலவிடும் என்றாா்.

பிகாரில் வரும் 28, நவம்பா் 3, 7-ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்த தோ்தலுக்கான தோ்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக, கரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் பிகாா் மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், பாஜக கரோனா தொற்றை வைத்து அரசியல் செய்கிறது. நாட்டு மக்களுக்கு பொதுவாக வழங்க வேண்டிய கரோனா தடுப்பூசியை, வாக்குகளை பெறும் நோக்கில் குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும் இலவசமாக அறிவிப்பது மலிவான அரசியல் என குற்றஞ்சாட்டியது.

முன்னதாக, ஒடிஸா உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ஆா்.பி. ஸ்வைன் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ஒடிஸா மாநிலத்தில் கரோனா தடுப்பூசி விவகாரத்தில் பாஜக நிலைப்பாடு என்ன? இது குறித்து ஒடிஸாவைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், பிரதீப் சாரங்கி ஆகியோா் பதிலளிக்க வேண்டும் என கூறியிருந்தாா்.

தற்போது எதிா்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பிரதீப் சாரங்கி தெரிவித்தாா்.

தமிழ்நாடு, மத்திய பிரதேசம், அஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என ஏற்கெனவே தெரிவித்தன. தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும், நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT