இந்தியா

மோசமான சுகாதாரம், தரமற்ற குடிநீர்.. குறைவான பலி விகிதத்துக்கு இதெல்லாம் காரணமா? 

DIN

புது தில்லி: மிக மோசமான சுகாதாரம் மற்றும் தரமற்ற குடிநீர் போன்றவை, இந்தியாவில் கரோனா பலி விகிதம் குறைவாக இருப்பதற்கான முக்கியக் காரணங்களாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

குறிப்பாக, சிறந்த சுகாதாரம், தரமான குடிநீர் வசதி இருக்கும் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், மோசமான சுகாதாரம், தரமற்ற குடிநீரைக் கொண்ட நாடுகளில் கரோனா உயிரிழப்புக் குறைவாக இருப்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இது குறித்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மிக மோசமான சுகாதாரத்தைக் கொண்ட நாடுகளில் வசிக்கும் மக்களின் உடல்களில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதும், அதிக சுகாதாரமான நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு கரோனா தொற்று அதிகமாகப் பரவுவதும் பலி விகிதம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

கடந்த வார இறுதி வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 1.17 லட்சம் பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். அதேவேளையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 77.61 லட்சமாக உள்ளது. அப்படியானால் கரோனா பாதித்தவர்களில் பலியாகும் விகிதம் என்பது 1.5 சதவீதமாக உள்ளது. இது உலகளவில் மிக மிகக் குறைவான விகிதமாகும்.

அவ்வளவு ஏன், இந்தியாவுக்குள் என்று எடுத்துக் கொண்டாலே, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோலில் மிகவும் பின்தங்கியிருக்கும் பிகாரில் கரோனா பலி விகிதம் 0.5% ஆகத்தான் உள்ளது. இது நாட்டின் சராசரி பலி விகிதத்தில் மூன்றில் ஒரு பங்குதான்.

இந்த எடுத்துக்காட்டுப் பட்டியலில் பிகார் மட்டும் தனித்து நிற்கவில்லை. இதனுடன் கேரளம், அசாம் மாநிலங்கள் தலா 0.4 சதவீத பலி விகிதத்துடனும், தெலங்கானா 0.5 சதவீத பலி விகிதத்துடனும், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் போன்றவை தலா 0.9 சதவீத பலி விகிதத்துடனும் கரோனாவுக்கு பலியாவோர் விகிதப் பட்டியிலில் ஒன்றுக்கும் குறைவான விகிதத்துடன் கடைசிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ஆனால், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பலி விகிதத்துடன் பட்டியலில் முதலிடங்களைப் பிடித்துள்ளன.  இந்த ஆய்வறிக்கை சிஎஸ்ஐஆர், புணேவில் உள்ள தேசிய உயிரணு அறிவியல் மையம் மற்றும் சென்னை கணிதவியல் மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்த ஆராய்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், குடிநீர் வசதி, சுகாதாரம், 10 லட்சம் பேருக்கு எத்தனை பேர் கரோனாவுக்கு பலியாகினர் என்பதை கணக்கெடுத்து ஆய்வு செய்துள்ளனர். 

மிகவும் முரண்பாடாக, மிகவும் சுகாதாரமான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு வேலையே இல்லாததால், குறைவான நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமாகி விடுகிறது. ஆனால் நாடு முழுவதும் திடிரென தொற்று நோய் பரவும் போது, பத்து லட்சம் பேருக்கு தொற்றால் பலியாவோர் விகிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணமாக உள்ளதாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நோய் எதிர்ப்பு சக்திகள் தொடர்பான பல ஆராய்ச்சிகளில், பாக்டீரியா மற்றும் தொற்று போன்றவை உடலை தாக்கும்போதுதான், ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பலம்பெற்று, வருங்காலத்தில் அதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக இருக்கும். இது குறித்து காங்ராவில் உள்ள ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியின் தொற்றுநோயியல் துறை நிபுணர் பர்வீன் குமார் வெளியிட்ட ஆய்வறிக்கையிலும், இதே கருத்து முன்மொழியப்பட்டுள்ளது.

மிகவும் மோசமான சுகாதார அமைப்பைக் கொண்ட பகுதிகளில் குறைவான கரோனா பலி விகிதம் இருப்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. அதற்குக் காரணம் அதுபோன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல்தான் என்கிறார்.

மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்படும் பிள்ளைகளுக்கு அவ்வப்போது நோய் தாக்குதல் ஏற்படுவதையும், சுகாதாரமற்ற முறையில் வளரும் குழந்தைகளுக்கு எந்த நோயும் ஏற்படாததும் கண்கூடாகவே பார்க்கும் விஷயமாக இருந்த நிலையில், இது, கரோனா பலி விகிதத்திலும் எதிரொலிக்கிறது என்பது புதிய தகவலாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ!

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

SCROLL FOR NEXT