இந்தியா

ராணுவ ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா உறுதி

DIN


புது தில்லி: இந்தியா-அமெரிக்கா ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் உறுதி ஏற்றுள்ளனர்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில் இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்தியா-அமெரிக்கா நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான 2+2 பேச்சுவார்த்தை, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை தில்லி வந்தடைந்தனர்.

இத்தகைய சூழலில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பருடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமைச்சர்கள் இருவரும் உறுதியேற்றனர். மேலும், பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு தொடர்பாகவும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ராஜ்நாத் சிங்குடனான பேச்சுவார்த்தைக்காக வருகை புரிந்த மார்க் எஸ்பருக்கு முப்படை வீரர்களும் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அமெரிக்க அமைச்சர்கள் மைக் பாம்பேயோ, மார்க் எஸ்பர் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

2+2 பேச்சுவார்த்தையில்...: இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களிடையேயான 2+2 பேச்சுவார்த்தையின்போது, கிழக்கு லடாக் மோதல்போக்கு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மேலும், இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக கையெழுத்திடப்படாமல் உள்ள "பாதுகாப்புப் படை பரிமாற்ற மற்றும் ஒத்துழைப்பு' ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்தும் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலமாக பாதுகாப்புப் படைகளில் பயன்படும் அதிநவீன தொழில்நுட்பங்கள், வரைபடங்கள் உள்ளிட்டவற்றை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள முடியும். அண்மைக் காலமாக, பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT