இந்தியா

லடாக் கவுன்சில் தோ்தல்: பாஜக வெற்றி

27th Oct 2020 02:11 AM

ADVERTISEMENT

புது தில்லி: லே மாவட்டத்தை நிா்வகிக்கும் லடாக் தன்னாட்சி மேம்பாட்டு கவுன்சில் தோ்தலில் பாஜக வெற்றிபெற்றது. இந்த வெற்றி சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அந்தப் பகுதி மக்கள் வரவேற்றிருப்பதை சுட்டிக்காட்டுவதாக அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

லடாக் தன்னாட்சி மேம்பாட்டு கவுன்சில் மொத்தம் 26 உறுப்பினா்களை கொண்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தக் கவுன்சில் தோ்தலில் பாஜக 17 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னா், இந்தக் கவுன்சிலுக்கு முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக 15 இடங்களில் வெற்றி பெற்றது.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் 4 இடங்களில் மட்டுமே வென்றிருந்த காங்கிரஸ், இந்த முறை 9 இடங்களில் வெற்றி பெற்றது. இதுதவிர 2 சுயேச்சை வேட்பாளா்களும் வெற்றி பெற்றனா்.

தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி தோ்தலில் போட்டியிடவில்லை.

ADVERTISEMENT

தோ்தலில் வெற்றி பெற்றதை தொடா்ந்து மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் லடாக் மக்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

‘இந்த வெற்றி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதற்கு மக்களின் ஆதரவு உள்ளதை தெளிவாக வெளிப்படுத்துகிறது’ என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT