இந்தியா

ம.பி. இடைத்தேர்தல்: பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெறும் - ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை

27th Oct 2020 04:31 AM

ADVERTISEMENT


புது தில்லி: மத்திய பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விசுவாசமான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர், கடந்த மார்ச் மாதம் அக்கட்சியிலிருந்து விலகினர். இது கமல்நாத் ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அதன் பின்னர் மேலும் மூன்று எம்எல்ஏக்கள் பதவி விலகி, பாஜகவில் சேர்ந்தனர். அத்துடன் மூன்று எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து காலமானதால், மாநிலத்தில் மொத்தம் 28 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

காலியாகவுள்ள 28 தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று  ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
நான் எழுப்பிய பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க காங்கிரஸ் முன்வரவில்லை. அதனால்தான் அக்கட்சியிலிருந்து விலகினேன்.

ADVERTISEMENT

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்கள் கமல்நாத், திக்விஜய் சிங் ஆகிய இருவரும் ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தியதன் மூலம் வாக்காளர்களை ஏமாற்றிவிட்டார்கள். தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை.

தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் 27 இடங்கள் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள். மொத்தமுள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து சிந்திக்க முடியும். ஆனால், காங்கிரஸ் கட்சி மீதும், அக்கட்சி எம்எல்ஏக்கள் மீதும்  மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே, 28 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் பாஜக வெற்றி பெறுவது உறுதி.

இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளர் இமர்தி தேவியை தரம் தாழ்ந்த முறையில் கமல்நாத் குறிப்பிட்டதைப் பற்றி கேட்கிறீர்கள். அதற்காக கமல்நாத் வருத்தம் தெரிவித்துவிட்டார். இருப்பினும் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், சில ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.

எனது தந்தை மாதவராவ் சிந்தியா, பாட்டி விஜயராஜே சிந்தியா ஆகியோர் மக்கள் நலன் காக்கவே அரசியலில் இணைந்து செயல்பட்டனர். என்னைப் பொருத்தவரை அரசியல் கட்சி என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான ஓர் ஊடகம். மக்களின் தேவைகளை நிறைவேற்ற நான் மிகவும் ஆர்வம் கொண்டிருக்கிறேன் என்றார் அவர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT