இந்தியா

நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி

27th Oct 2020 04:18 AM

ADVERTISEMENT


புவனேசுவரம்: நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்தார். பிகார் மாநில மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. கரோனா தொற்று சூழலை பாஜக அரசியலுக்கு பயன்படுத்துகிறதென எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் பிரதாப் சாரங்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஒடிஸாமாநிலம் பாலேஸ்வரில் நவம்பர் 3- ஆம் தேதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட  பால்வளம், மீன்வளம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே கூறியுள்ளார். இந்த தடுப்பூசிக்காக ஒவ்வொரு நபருக்கும் ரூ.500- ஐ மத்திய அரசு செலவிடும் என்றார்.

பிகாரில் வரும் 28, நவம்பர் 3, 7- ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்த தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக, கரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் பிகார் மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. 

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாஜக கரோனா தொற்றை வைத்து அரசியல் செய்கிறது. நாட்டு மக்களுக்கு பொதுவாக வழங்க வேண்டிய கரோனா தடுப்பூசியை, வாக்குகளை பெறும் நோக்கில் குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும் இலவசமாக அறிவிப்பது மலிவான அரசியல் என குற்றஞ்சாட்டியது. 

முன்னதாக, ஒடிஸாஉணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.பி. ஸ்வைன் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ஒடிஸாமாநிலத்தில் கரோனா தடுப்பூசி விவகாரத்தில் பாஜக நிலைப்பாடு என்ன? இது குறித்து ஒடிஸாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரதாப் சாரங்கி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என கூறியிருந்தார். 

தற்போது  எதிர்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பிரதாப் சாரங்கி தெரிவித்தார். 

தமிழ்நாடு, மத்திய பிரதேசம், அஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என ஏற்கெனவே தெரிவித்தன. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், நாட்டு மக்களுக்கு  கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT