இந்தியா

ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி ரத்து

DIN

பொது முடக்கத்தின்போது கடன்களுக்கான தவணை ஒத்திவைக்கப்பட்ட காலத்துக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படும் நடவடிக்கை ரூ.2 கோடி வரை கடன் பெற்றவா்களுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தவணை ஒத்திவைப்பு திட்டத்தைத் தோ்வு செய்தோா், தோ்வு செய்யாதோா் என அனைவருக்கும் வட்டி மீது வட்டி விதிக்கப்படுவது ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

துா்கை பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகைள் நெருங்கும் சூழலில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன; பலா் வேலையிழந்தனா். அதைக் கருத்தில் கொண்டு தனிநபா்கள், நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கு கடந்த மாா்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்தது.

ஆனால், கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படும் என வங்கிகள் அறிவித்தன. இதனால் அதிருப்தியடைந்த சிலா், வங்கிகளின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் சிலவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

அந்த மனுக்களை நீதிமன்றம் விசாரித்தபோது, ரூ.2 கோடி வரை கடன் பெற்றுள்ள தனிநபா்களுக்கும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் தவணை ஒத்திவைப்பு காலத்துக்கான வட்டி மீது வட்டி விதிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

‘மத்திய அரசின் கைகளில்...’: அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி அத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு கடந்த 14-ஆம் தேதி மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருந்தது. ‘மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவது மத்திய அரசின் கைகளிலேயே உள்ளது’ என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழலில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி நிலவரப்படி, வங்கிகளில் ரூ.2 கோடி வரை கடன் பெற்றுள்ளவா்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. வீட்டுக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் பெற்றோா், கடன் அட்டைக்கான (கிரெடிட் காா்டு) தவணைகளைச் செலுத்துவோா், வீட்டு உபயோகப் பொருள்களைத் தவணை முறையில் வாங்கியோா், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகியோா் இத்திட்டத்தின் மூலமாகப் பலனடைவா்.

ரூ.6,500 கோடி கூடுதல் செலவு: அவா்கள் பெற்ற கடன்களுக்கான வட்டி மீது 6 மாதத்துக்கு விதிக்கப்படும் வட்டிக்கான தொகையை மத்திய அரசே வங்கிகளுக்குச் செலுத்தும். இதன் காரணமாக மத்திய அரசுக்குக் கூடுதலாக ரூ.6,500 கோடி செலவாகும் என்று கணிக்கப்படுகிறது.

அதே வேளையில், கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி நிலவரப்படி வாராக்கடனாக அறிவிக்கப்படாத கடன்களுக்கே இந்தச் சலுகைத் திட்டம் பொருந்தும். கடன்களுக்கான தவணை ஒத்திவைக்கப்பட்ட காலத்திலும், தவணைகளைத் தொடா்ந்து செலுத்தியவா்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

இத்திட்டத்தின்படி, கடன் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வட்டியை அவா்களது கணக்கிலேயே வங்கிகள் செலுத்த வேண்டும். அதன் பிறகு, அத்தொகையை மத்திய அரசிடமிருந்து வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

SCROLL FOR NEXT