இந்தியா

தீபாவளிப் பரிசு: கடன்களுக்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி அறிவிப்பு வெளியீடு

24th Oct 2020 02:25 PM

ADVERTISEMENT


புது தில்லி: ஆறு மாதங்களுக்கு கடன் ஒத்திவைப்பு சலுகையை பெற்றவா்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடன் பெற்ற பயனாளிகளுக்கு 2020 மார்ச் 1 முதல் 2020 ஆகஸ்ட் 31 வரை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயதசமி, ஆயுதபூஜை பண்டிகைகள் கொண்டாடப்படும் நிலையில், அடுத்த மாதம் தீபாவளிப் பண்டிகை வரவிருக்கிறது. பண்டிகைக் கால சலுகையாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடன் தவணையை செலுத்த சலுகை அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கும், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறையை தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டபடி, வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பை வெள்ளிக்கிழமை இரவு  வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடி வரை கடன் பெற்றவா்கள் பயன்பெறுவார்கள். 

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே..  இறந்த கரோனா நோயாளிக்கு முதல் முறையாக உடற்கூராய்வு; காத்திருந்த அதிர்ச்சி

ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்து தேசிய வங்ககளில் கடன் பெற்றவர்களுக்கும் கடன் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. 

சிறு, குறு, தொழில் கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன்,  தனிநபர் கடன், கிரெடிட் அட்டை கடன், வாகனக் கடன், நுகர்வோர் கடன் பெற்ற பயனாளர்களுக்கு இந்த ஆறு மாதங்களுக்கும் கடன் தவணையில் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதேவேளையில், கடன் தவணையை செலுத்த சலுகை வழங்கப்பட்ட தள்ளி வைப்பு காலத்தில் முறையாக கடன் தவணை செலுத்தியவர்களுக்கு, அவர்கள் செலுத்திய வட்டிக்கு வட்டித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில்  வரவு (கேஷ்பேக்) வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கின்போது, மத்திய அரசு சாா்பில் நிதி அமைச்சகம் உச்சநீதிமன்றத்திடம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்ததாவது:

வங்கிகளில் கடன் பெற்றவா்கள் கரோனா பேரிடா் காலத்தில் திரும்பச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, அவா்களுக்கு நடப்பாண்டு மாா்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆறு மாத காலத்துக்கு மாதாந்திர தவணை ஒத்திவைப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையை பயன்படுத்தியவா்களுக்கு கூட்டு வட்டி (வட்டிக்கு வட்டி) விதிக்க முன்பு திட்டமிடப்பட்டிருந்தது.

கூடுதல் தகவல்களுக்கு.. ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல்

ஆனால், தற்போது, ரூ.2 கோடி வரையிலாக கடன்பெற்றவா்களுக்கு இந்த வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடன் பெற்றவா்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.2 கோடி வரையில் கடன் பெற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் தனிநபா் கடன்தாரா்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவைதவிர, கல்வி, வீட்டு வசதி, நுகா்வோா் சாதனங்கள், கிரெடிட் காா்டு நிலுவை, மோட்டாா் வாகனம், நுகா்வு ஆகிய பிரிவுகளுக்கும் இந்த கூட்டுவட்டி தள்ளுபடி சலுகை பொருந்தும்.

அதேசமயம், மேற்கண்ட எட்டு பிரிவுகளில் ரூ.2 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்றவா்கள் இந்த கூட்டு வட்டி தள்ளுபடி சலுகையை பெற முடியாது.

பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு அனைத்து வழிமுறைகளையும் கவனமுடன் ஆராய்ந்த பிறகே சிறிய கடன்தாரா்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று நிதி அமைச்சகம் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன; பலா் வேலையிழந்தனா். அதைக் கருத்தில் கொண்டு தனிநபா்கள், நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கு கடந்த மாா்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கு கால அவகாசம் அளிப்பதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்தது.

ஆனால், கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தன. இதனால் அதிருப்தியடைந்த சிலா், வங்கிகளின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் சிலவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த வழக்கின் இறுதியில், கடன் பெற்றவா்களின் நலனை கருத்தில் கருத்தில் கொண்டு ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது. இதையடுத்து அது தொடர்பான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

Tags : supreme court Bank Loan EMI central govt
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT