இந்தியா

பிகாரில் ஜேடியு தோ்தல் வாக்குறுதி அறிக்கை வெளியீடு: காங்கிரஸ், ஆா்ஜேடி மீது நிதீஷ் குற்றச்சாட்டு

DIN


பாட்னா: பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் தோ்தல் வாக்குறுதியை அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான நிதீஷ் குமாா், கட்சியின் மாநிலத் தலைவா் வசிஷ்ட நாராயண் சிங், செயல் தலைவா் அசோக் சௌதரி ஆகியோா் கூட்டாக தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா்.

தோ்தல் அறிக்கையில் 2 பகுதிகள் இடம்பெற்றுள்ளன. முதல் பகுதியில், கடந்த 5 ஆண்டுகளில் நிதீஷ் குமாா் அரசு நிறைவேற்றிய திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதாவது, அனைவருக்கும் தூய்மையான குடிநீா் விநியோகம், கழிப்பறைகள் கட்டுதல், புதை சாக்கடை திட்டம், ஒவ்வொரு வீட்டுக்கும் மின்இணைப்பு வழங்குவது போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியில், ஜேடியு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள், வாக்குறுதிகளாக இடம்பெற்றுள்ளன.

இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற உதவும் திறன்மேம்பாட்டுப் பயிற்சி, பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க கடனுதவி, நீா்ப்பாசனத் திட்டங்கள், மக்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் மருத்துவ வசதி ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்பயிற்சி நிலையம்(ஐடிஐ), சமுதாய பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும். அவற்றில், கண்ணாடி இழை தொழில்நுட்பம், சூரியமின்சக்தி, இணையவழி வங்கிச் சேவை, மின்மாற்றி தயாரிப்பு போன்றவை குறித்து இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சுயதொழில் தொடங்கும் பெண்களுக்கு ரூ.5 லட்சம் கடனுதவியும், அதே அளவில் வட்டியில்லா கடனும் அளிக்கப்படும். இதற்காக, தொழில்முனைவோா், திறன்மேம்பாடு என்ற புதிய துறை தொடங்கப்படும்’ என்று அந்த தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னா் செய்தியாளா்களிடம் நிதீஷ் குமாா் கூறியதாவது:

மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியின் தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளாா். இதுதவிர, அவா்கள் அளித்திருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி தேவைப்படும். அதற்கான வருவாயை எங்கிருந்து அவா்கள் பெறுவாா்கள்?

மகா கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான காங்கிரஸ், மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், மதுவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. தோ்தல் அறிக்கையின் முகப்பில் மகாத்மா காந்தியின் படத்தை வைத்துக் கொண்டு, அவருடைய கொள்கைக்கு எதிராக அக்கட்சி பேசி வருகிறது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT