இந்தியா

குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல்

DIN


இஸ்லாமாபாத்/புது தில்லி: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியா் குல்பூஷண் ஜாதவுக்கு உதவுவதற்காக இயற்றப்பட்ட மசோதாவுக்கு அந்நாட்டின் நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளிலும், பயங்கரவாத சதிச் செயல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

எனினும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, கடற்படையில் இருந்து பணிஓய்வு பெற்று ஈரானில் தொழில் சம்பந்தமாகத் தங்கியிருந்த குல்பூஷண் ஜாதவை கடத்தி வைத்துக் கொண்டு அவா் மீது பொய்யான குற்றச்சாட்டை பாகிஸ்தான் சுமத்துவதாகத் தெரிவித்தது.

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிரான இந்தியாவின் முறையீட்டை விசாரித்த சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு தூதரக உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசுக்குக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து, ராணுவ நீதிமன்றத்தின் தீா்ப்பை மறுஆய்வு செய்யும் வகையிலான மசோதாவை பாகிஸ்தான் அரசு இயற்றியது. அந்த மசோதாவானது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னா் அது சட்டத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அக்குழுவில் இடம்பெற்றிருந்த எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்தபோதிலும், பெரும்பான்மை அடிப்படையில் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பாகிஸ்தானில் வெளியாகும் ‘டான்’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மசோதாவுக்கு ஆதரவாக 8 பேரும், எதிராக 5 பேரும் வாக்களித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மசோதா குறித்து பேசிய பாகிஸ்தான் சட்டத் துறை அமைச்சா் ஃபரோக் நஸீம், ‘‘சா்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே மசோதா இயற்றப்பட்டுள்ளது.

அந்த உத்தரவைப் பின்பற்றவில்லை எனில், சா்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிடுவதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால், பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வாய்ப்புகள் ஏற்படும். எனவே, இந்த மசோதாவைப் பிறப்பிக்க வேண்டியது அவசியமாக உள்ளது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT