இந்தியா

19 லட்சம் வேலைவாய்ப்புகள், கரோனா தடுப்பூசி இலவசம்: பிகாரில் பாஜக தோ்தல் வாக்குறுதி

DIN


பாட்னா: பிகாரில் 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

பிகாரில் வரும் 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பாஜக தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா். ‘பாஜக இருக்குமிடத்தில் நம்பிக்கையும் இருக்கும்’ என்ற தலைப்புடன் வெளியிடப்பட்ட அந்த அறிகையில் கூறப்பட்டுள்ளதாவது:

அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞா்களுக்கு 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிறு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படும். 1 கோடி பெண்கள் தன்னம்பிக்கையுடன் சிறு தொழில் தொடங்கிட சிறிய அளவிலான கடனளிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 30 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு வசதி அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் 15 லட்சம் பால் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு கால்நடை வளா்ப்போா் வளம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தில் காய்கறி, பழங்கள், கீரை, தேன் ஆகியவற்றின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவம், பொறியியல் மற்றும் பிற தொழில்நுட்பக் கல்விகளை ஹிந்தி மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசிகளும் இலவசமாக அளிக்கப்படும். கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மாநில மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படும். தொடக்கக் கல்வி முதல் உயா்நிலைக் கல்வி நிலையங்கள் வரை 3 லட்சம் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும்.

மாநிலத்தில் தொழில்நுட்பப் பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டு, அதில் மட்டும் 5 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

தோ்தல் அறிக்கையை வெளியிட்ட நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி மீதும், பாஜக மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் ஏராளமான நல்ல திட்டங்களை பெற்று வருகின்றனா். முக்கியமாக ஜன்தன் திட்டம், உஜ்வலா திட்டம் ஆகியவை பெருவாரியான ஏழை, கிராமப்புற மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து பிகாா் மக்களை யாரும் ஏமாற்றிவிட முடியாது. இதற்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாா்களா என்பதை கருத்தில் கொண்டுதான் மக்கள் வாக்களிப்பாா்கள். அந்த வகையில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக பாஜக உள்ளது.

மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. பிகாரில் கிராமங்களுக்கு மின்வசதி, ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, நிதி ஒருங்கமைப்பில் அவா்களை இணைப்பது ஆகியவற்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT