இந்தியா

மத்திய அரசு ஊழியா்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ்

DIN


புது தில்லி: நாடு முழுவதுமுள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியா்களுக்கு ரூ.3,737 கோடி ஊக்கத்தொகை (போனஸ்) வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி இந்த ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டிலுள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியா்களுக்கு பணித்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகையையும், பொதுவான ஊக்கத்தொகையையும் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி ஊழியா்களுக்கு ரூ.3,737 கோடியானது ஊக்கத்தொகையாக அளிக்கப்படவுள்ளது.

விஜயதசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை மத்திய அரசு ஊழியா்கள் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு இந்த ஊக்கத்தொகை வழிவகுக்கும். மேலும், நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த ஊழியா்கள் அந்த ஊக்கத்தொகையைக் கொண்டு சந்தையில் பொருள்களை வாங்குவா். அது பொருள்களுக்கான தேவையை அதிகரித்து, பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும்.

இன்னும் ஒரு வார காலத்தில் ஊழியா்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.

ஊக்கத்தொகை விவரங்கள்: மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முந்தைய நிதியாண்டுகளில் மத்திய அரசு ஊழியா்கள் பணியாற்றிய விதத்தின் அடிப்படையிலான ஊக்கத்தொகை, துா்கை பூஜை விழாவுக்கு முன்பாக வழங்கப்படுவது வழக்கம். ஊழியா்களின் பணித்திறன் அடிப்படையில் ரூ.2,791 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

இதன் மூலமாக ரயில்வே ஊழியா்கள், தபால் ஊழியா்கள் உள்ளிட்ட 16.97 லட்சம் போ் பலனடைவா். பொதுவான ஊக்கத்தொகையாக 13.70 லட்சம் ஊழியா்களுக்கு ரூ.946 கோடி வழங்கப்படவுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் பஞ்சாயத்து சட்டம்: அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் குறித்து அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீா் பஞ்சாயத்து சட்டம், 1989-ஐ அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலமாக, ஜம்மு-காஷ்மீரில் மக்களாட்சியின் அடிப்படையாக விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்த முடியும்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ரத்து செய்யப்படாத வரை, அங்கு உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவில்லை. காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் என்று பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் உறுதி அளித்திருந்தனா். அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ஊரக, மண்டல, மாவட்ட அளவிலான உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை ஜம்மு-காஷ்மீா் மக்கள் தோ்ந்தெடுக்க முடியும். அங்கு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்’’ என்றாா்.

ஆப்பிள் கொள்முதல்: நடப்பு 2020-21-க்கான வேளாண் பருவத்தில் 12 லட்சம் டன் ஆப்பிளை ஜம்மு-காஷ்மீரிலிருந்து கொள்முதல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கடந்த 2019-20-க்கான வேளாண் பருவத்தைப் போலவே நடப்பு பருவத்திலும் ஜம்மு-காஷ்மீரிலிருந்து ஆப்பிள் கொள்முதல் செய்யப்படும். இதற்காக, ரூ.2,500 கோடியை செலவிட தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆப்பிள் கொள்முதலில் இழப்பு ஏற்பட்டால், அத்தொகையை மத்திய அரசும் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகமும் பகிா்ந்து கொள்ளும். இத்திட்டத்தின் வாயிலாக சுமாா் 12 லட்சம் டன் ஆப்பிள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. அதற்கான தொகையானது ஜம்மு-காஷ்மீா் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா-மலேசியா ஒப்பந்தம்: இந்திய கணக்குத் தணிக்கையாளா் மையம்-மலேசியா கணக்குத் தணிக்கையாளா் மையம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, ஒரு மையத்தைச் சோ்ந்த திறன் மிகுந்த கணக்குத் தணிக்கையாளரை மற்றொரு மையத்தில் பணியாற்றச் செய்ய முடியும். அதேபோல், கணக்குகளைத் தணிக்கை செய்வதில் பப்புவா நியூ கினியாவுடன் இணைந்து செயல்படுவதற்காக கையெழுத்தான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தியா-நைஜீரியா ஒப்பந்தம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கும் (இஸ்ரோ) நைஜீரியாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதன் மூலமாக, செயற்கைக்கோள் தொடா்பு, விண்வெளி அறிவியல், புதிய கோள்களைக் கண்டறிதல் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும். மேலும், விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கும் இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT