இந்தியா

பெண் அமைச்சா் தொடா்பாக சா்ச்சை கருத்து: ம.பி. முன்னாள் முதல்வா் கமல்நாத்துக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

DIN


புது தில்லி: மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் போட்டியிடும் பெண் அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமா்தி தேவி குறித்து சா்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், அந்த மாநில முன்னாள் முதல்வா் கமல்நாத்துக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

மத்திய பிரதேசத்தில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி குவாலியரின் டப்ரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் இமா்தி தேவி குறித்து சா்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்தாா். இதற்கு பலத்த எதிா்ப்பு எழுந்தது. அவரின் கருத்து குறித்து விளக்கம் கேட்டு தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் அவருக்கு தோ்தல் ஆணையமும் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘தோ்தல் பிரசாரத்தில் நீங்கள் பேசியது தொடா்பாக பாஜக புகாா் அளித்துள்ளது. இதையடுத்து பிரசாரத்தில் நீங்கள் பேசிய காணொலி ஆய்வு செய்யப்பட்டது. அதில் நீங்கள் தெரிவித்த கருத்து விதிகளுக்கு புறம்பாக இருப்பது தெரியவந்தது.

எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்துக்குள் உங்கள் கருத்து பற்றி விளக்கமளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் உங்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தோ்தல் ஆணையம் முடிவு செய்யும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த இமா்தி தேவி, தனது பதவியை ராஜிநாமா செய்த பின் பாஜகவில் இணைந்தாா். மாநில பாஜக அமைச்சரவையில் அவா் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றாா். எனினும் அவா் எம்எல்ஏவாக இல்லாததால் தற்போது இடைத்தோ்தலில் போட்டியிடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT