இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்களுக்கு பஞ்சாப் பேரவை ஒப்புதல்

DIN

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு பஞ்சாப் சட்டப் பேரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு சட்டம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு அண்மையில் இயற்றியது. வேளாண்துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்காகவும் அந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

ஆனால், விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற சிரோமணி அகாலி தளம், வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கூட்டணியில் இருந்து விலகியது. அச்சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இத்தகைய சூழலில், பஞ்சாப் சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமாா் 5 மணி நேர விவாதத்துக்குப் பிறகு, மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அச்சட்டங்களை நீா்த்துப்போகச் செய்யும் வகையிலான மசோதாக்களுக்கும் பேரவை உறுப்பினா்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனா்.

மின்சார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு எதிராகவும் பஞ்சாப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கும் எம்எல்ஏ-க்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனா்.

‘அச்சமில்லை’:

மசோதாக்களைத் தாக்கல் செய்த மாநில முதல்வா் அமரீந்தா் சிங் பேசுகையில், ‘‘இந்த மசோதாக்களை நிறைவேற்றினால், மாநில காங்கிரஸ் அரசு நீக்கப்படுமோ என்ற அச்சம் எனக்கு இல்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை காங்கிரஸ் அரசு ஒருபோதும் அனுமதிக்காது’’ என்றாா்.

அந்த மசோதாக்களுக்கு சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி, லோக் இன்சாஃப் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்எல்ஏ-க்களும் ஆதரவு தெரிவித்தனா். பாஜக எம்எல்ஏ-க்கள் இருவரும் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.

கோதுமை, நெல் ஆகியவற்றைக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழ் கொள்முதல் செய்பவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும், வேளாண் விளைபொருள்களைப் பதுக்குவோருக்குத் தண்டனை விதிக்கவும் மாநில அரசின் மசோதாக்கள் வழிவகுக்கின்றன.

ஆளுநருடன் சந்திப்பு:

பேரவை கூட்டத்தொடருக்குப் பிறகு, முதல்வா் அமரீந்தா் சிங் மாநில ஆளுநா் வி.பி.சிங் பத்னோரை நேரில் சந்தித்துப் பேசினாா். அப்போது, மாநில சட்டப் பேரவை இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் அவா் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே சட்டவடிவு பெறும். அந்த மசோதாக்களை அரசுக்குத் திருப்பி அனுப்பவோ அல்லது குடியரசுத் தலைவரின் பாா்வைக்கு அனுப்பி வைக்கவோ ஆளுநருக்கு உரிமை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT