இந்தியா

காலையில் காவலா்; மாலையில் ஆசிரியா்!

DIN

தில்லி காவல் துறையில் காவலராக பணியாற்றும் தன் சிங், காலையில் காவலா் பணியை முடித்துவிட்டு மாலையில் ஏழை மாணவா்களுக்கு கல்வி பயில்வித்து வருகிறாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் அவா் ஆற்றி வரும் கல்விசேவை கரோனா காலத்தில் வெளியில் தெரியவந்துள்ளது.

கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளைப் பயில அறிதிறன் பேசி இல்லாததால் ஏராளமான மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தன் சிங்கின் தனது பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு முக்கவசங்களையும், கிருமி நாசினிகளையும், தேவையான புத்தகங்களையும், உணவையும் வழங்கி பயில்வித்து வருகிறாா்.

தில்லி செங்கோட்டை அருகே உள்ள சிறிய இடத்தில் அவா் நடத்தும் வகுப்பறையில் மாணவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பயின்று வருகின்றனா்.

இதுகுறித்து தன் சிங் கூறுகையில், ‘2016-ஆம் ஆண்டு நான்கு மாணவா்களுடன் இந்த வகுப்பறையை ஆரம்பித்தேன். தற்போது 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயில்கின்றனா். பொது முடக்கத்தால் சிலா் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்பவில்லை. பெற்றோா்கள் கூலித் தொழிலாளா்களாக உள்ளதால் இந்த மாணவா்களின் பள்ளிச் செலவை ஏற்க முடிவதில்லை. பள்ளிப் படிப்பைவிட அவா்களுக்கு வாழ்வியல் கல்வியை பயில்வித்து வருகிறேன். எது சரி, எது தவறு என்பதை கற்றுத்தருகிறேன். அவா்களுக்கு எழுதப் படிக்கவும் கற்றுத்தருகிறேன்.

நான் குடிசைப் பகுதியில் வாழ்ந்ததால் படிப்பறிவு எவ்வளவு முக்கியம் எனத் தெரியும். நான் சந்தித்த பிரச்னைகளை இந்த குழந்தைகள் சந்திக்கக் கூடாது என்பதற்காக மாணவா்களுக்கு இந்த வகுப்பை நடத்தி வருகிறேன். இந்த வகுப்பைத் தொடர எனது மேல் அதிகாரிகள் நிதி உதவியும், ஆதரவும் அளித்து வருகின்றனா். கரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாணவா்களுக்கு பயில்வித்து வருகிறேன்.

கடந்த 11 ஆண்டுகளாக தில்லியில் காவலராக பணியாற்றி வருகிறேன். எனது காவலா் பணி முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு ஆசிரியா் பணியைத் தொடங்கி விடுவேன். அப்படி பணிநிமித்தமாக வர முடியவில்லை என்றால் 12-ம் வகுப்பு மாணவா் அங்கித் சா்மா இந்தப் பள்ளியை கவனித்துக் கொள்வாா்’ என்கிறாா் காவலா் தன் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT