இந்தியா

50 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு புதிய வேளாண் சட்டங்கள் பற்றி தெரியவில்லை: ஆய்வில் தகவல்

DIN

புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் விவசாயிகளில் பாதி பேருக்கு அந்தச் சட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரியவில்லை என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அதில், உழவர் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டமானது விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை திறந்தவெளி சந்தையில் விற்கும் சுதந்திரத்தை வழங்குகிறது; விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத சட்டமானது விவசாய பண்ணைகள், பதப்படுத்துவோர், மொத்த வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோருடன் எதிர்கால விளைபொருள்களை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் உரிமையை விவசாயிகளுக்கு வழங்குகிறது; அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டமானது தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அவற்றை இருப்பு வைக்கும் வரம்பை நீக்க வழிவகுக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய சட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், "புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக இந்திய விவசாயிகளின் கருத்துகள்' என்ற தலைப்பில் "காவோ கனெக்ஷன்' என்ற நிறுவனம் ஓர் ஆய்வை நடத்தியது. அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கிய 16 மாநிலங்களைச் சேர்ந்த 53 மாவட்டங்களில் அக். 3 முதல் 9 வரை 5,022 விவசாயிகளிடம் இந்த ஆய்வை நடத்தி முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சட்டங்களை எதிர்க்கும் 57 சதவீத விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருள்களை குறைந்த விலையில் திறந்தவெளி சந்தையில் விற்க நேர்ந்துவிடுமோ எனவும், அவர்களில் 33 சதவீதம் பேர் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு முடிவுக்கு கொண்டு வந்துவிடுமோ எனவும் அஞ்சுகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க வேண்டும் என 59 சதவீத விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடுத்தர, பெரிய விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு மற்றும் சிறு விவசாயிகள் இந்தப் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கின்றனர்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பாதிக்கும் மேற்பட்ட (52 சதவீதம்) விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், அவர்களில் 36 சதவீதம் பேருக்கு இந்தச் சட்டங்களைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. அதேபோல வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் 35 சதவீதம் பேரில், 18 சதவீதம் பேருக்கு சட்டங்களைப் பற்றி தெரியவில்லை.

மோடி அரசானது விவசாயிகளுக்கு ஆதரவானது என 44 சதவீதம் பேரும், விவசாயிகளுக்கு எதிரானது என 28 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், மோடி அரசானது விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கிறது என 35 சதவீதம் பேரும், தனியார் பெருநிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கிறது என 20 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 67 சதவீதம் விவசாயிகள் புதிய சட்டங்களைப் பற்றி தெரிந்துவைத்துள்ளனர். நாட்டில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரு பங்கு விவசாயிகளுக்குத் தெரிந்துள்ளது.

இதில் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வடமேற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகளே (91 சதவீதம்) அதிகம். மேற்கு வங்கம், ஒடிஸா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு பிராந்தியத்தில் போராட்டம் குறித்து குறைந்தபட்ச விழிப்புணர்வே (46 சதவீதம்) உள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு 52 சதவீதம் பேர் எதிர்ப்பும், 35 சதவீதம் பேர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் 57 சதவீதம் பேர், திறந்தவெளி சந்தையில் தங்களது உற்பத்தி பொருள்களைக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் புதிய சட்டங்களை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

ஆதரவு தெரிவித்துள்ளவர்களில் 47 சதவீதம் பேர் தங்களது விளைபொருளை நாட்டில் எந்தப் பகுதியிலும் விற்பனை செய்ய இந்த சட்டங்கள் சுதந்திரம் அளிப்பதாக நம்புகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT