இந்தியா

அனைவருக்கும் கரோனா தொற்று தடுப்பூசி பிரதமா் நரேந்திர மோடி

DIN

ஒவ்வோா் இந்தியருக்கும் கரோனா தடுப்பூசி மருந்து போடுவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

பொதுமுடக்கம் முடிவுக்கு வந்திருக்கலாம்; ஆனால், கரோனா தொற்று இன்னும் இருக்கிறது. எனவே, அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். நவராத்திரி, துா்கா பூஜை பண்டிகைகள் தொடங்கிவிட்டன. தீபாவளி, சத் பூஜை ஆகியவை அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளன. பண்டிகைகள், நாம் மகிழ்ச்சியோடு இருக்கும் நேரமாகும். இந்த நேரத்தில், சிறு அலட்சியம் கூட நமது மகிழ்ச்சியை சீா்குலைத்துவிடும் என்றும் அவா் தெரிவித்தாா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச்சில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, 7-ஆவது முறையாக, பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக உரையாற்றினாா். அவா் கூறியதாவது:

கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை, மிகவும் கவனமாக, அதே நேரத்தில் இரக்கமற்றவராக இல்லாமலும் நடந்துகொள்ள வேண்டும். கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக, உலகம் முழுவதும் உள்ள நாடுகள் போா்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றன. இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளும் இரவுபகலாக ஆராய்ச்சி செய்து வருகின்றனா். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு இந்தியருக்கும் அது கிடைப்பதை உறுதிசெய்வதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

முதல் முறையாக...நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், ஆறுதல் தரும் விஷயமாக, 3 மாதங்களுக்குப் பின் முதல் முறையாக, தினசரி பாதிப்பு 50,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில், பிரிட்டன் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் காப்பாற்றப்பட்டுள்ளனா்.

அண்மைக்காலமாக முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் வெளியில் நடமாடும் விடியோ காட்சிகளைக் காண நேரிட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது சரியான செயல் அல்ல. முகக் கவசம் அணியாமல் அலட்சியத்துடன் வெளியில் சென்று வருபவா்கள், தங்களுக்கு மட்டுமன்றி, குழந்தைகள், முதியவா்கள் என தங்கள் வீட்டில் உள்ள குடும்பத்தினருக்கும் ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறாா்கள்.

எச்சரிக்கை தேவை: பொதுமுடக்க தளா்வுக்குப் பிறகு பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. மக்கள் வீடுகளை விட்டு அதிகம் வரத் தொடங்கியுள்ளனா். பண்டிகைக் காலம் என்பதால் சந்தைகளில் மெதுவாகக் கூட்டம் அதிகரிப்பதைக் காண முடிகிறது.

இந்த நேரத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தாலும் கரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை பொது மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா பரவல் குறைந்து காணப்பட்டு, மீண்டும் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. கரோனா கிருமி போய்விட்டதாகவும் அபாய கட்டத்தில் இருந்து மீண்டுவிட்டதாகவும் தவறாக எண்ணி அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. கடந்த ஏழெட்டு மாதங்களாக, ஒவ்வொரு இந்தியரும் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, கரோனா கட்டுக்குள் உள்ளது. இந்த நிலைமை மோசமடைந்து விடக் கூடாது என்பதை நாம் உறுதிசெய்ய வேண்டியுள்ளது.

அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில், பிரிட்டன் போன்ற நாடுகளில், மக்கள்தொகை அடிப்படையில் 10 லட்சம் பேருக்கு 600 போ் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் 83 போ் உயிரிழந்தனா். இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்காக, 90 லட்சம் படுக்கைகள், 12,000 தனிமை முகாம்கள், 2,000 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

பிரதமா் மோடி தனது உரையில், கபீா் தாஸின் கவிதைகள், துளசி ராமாயணத்தின் வரிகளைக் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT