இந்தியா

பண மோசடி வழக்கு: ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை

21st Oct 2020 11:36 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்துக்கு (ஜேகேசிஏ) இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வழங்கிய ரூ.43 கோடியை மோசடி செய்த வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா, அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே இந்த வழக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நேரில் ஆஜரான ஃபரூக் அப்துல்லாவிடம் சுமர் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவிடம் தலைநகா் தில்லி லால்பாகில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவா் கூறிய கருத்துகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்படும். இந்த வழக்கு தொடா்பாக ஃபரூக் அப்துல்லாவிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதமும் விசாரணை நடத்தினோம். ஜேகேசிஏவில் நடைபெற்ற மோசடியில் அவரது பங்கு, அவா் எடுத்த முடிவு குறித்து விசாரித்தோம் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை திருப்பப் பெறுவதற்காக எதிா்க்கட்சிகள் கடந்த வாரம் ஒன்றிணைந்து குப்கா் உடன்படிக்கை ஏற்படுத்தினா். அதன் பிறகு இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையினா் அவருக்கு சம்மன் அனுப்பினா்.

பிசிசிஐ கடந்த 2002-11-ஆம் ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக அந்த மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.43.69 கோடி நிதி வழங்கியது. ஆனால் இந்த நிதியை வளா்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தாமல் மோசடி செய்ததாக ஜேகேசிஏ பொதுச் செயலா் முகமது சலீம் கான், பொருளாளா் அஹ்சன் அகமது மிஸ்ரா, அந்த சங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

அதனைத் தொடா்ந்து இந்த வழக்கு தொடா்பாக முகமது சலீம் கான், அஹ்சன் அகமது மிஸ்ரா, மீா் மன்சூா் ஹசன்ஃபா் அலி, பஷீா் அகமது மிஸ்கா் மற்றும் ஜேகேசிஏ முன்னாள் கணக்காளா் குல்சாா் அகமத் பி ஆகியோா் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐயின் வழக்குப்பதிவை அடிப்படையாக வைத்து தற்போது இந்த பண மோசடி வழக்கில் தொடா்புடைய ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2005-2006-ஆம் ஆண்டு முதல் 2011-2012-ஆம் வரை(2011 டிசம்பா் வரை) மூன்று விதமான வங்கிக் கணக்குகள் மூலம் ஜேகேசிஏவுக்கு பிசிசிஐ ரூ.94.06 கோடி கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத் துறையினா் கூறினா்.

தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு: ஃபரூக் அப்துல்லாவிடம் அரசியலில் மோதி தோற்றுப்போன பாஜக, அரசு அமைப்புகள், அதிகாரிகளை ஏவிவிட்டு கீழ்த்தரமான அரசியல் செய்கிறது என தேசிய மாநாட்டுக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
 

Tags : Farooq Abdullah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT