இந்தியா

மாற்றங்களும் திட்டங்களும் தேசத்தின் வளர்ச்சிக்காகவே: பிரதமர் நரேந்திர மோடி

DIN


மைசூரு: தேசத்தின் வளர்ச்சிக்காகவே அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களும் திட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


திங்கள்கிழமை நடைபெற்ற மைசூரு பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில், தில்லியில் இருந்து காணொலி முறையில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியது: 

இந்தியாவை உலகின் உயர்கல்வி மையமாக மாற்றுவதற்கு அனைத்து நிலைகளிலும் தேவையான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நமது இளைஞர்கள் போட்டித் திறன் கொண்டவர்களாக மாற வேண்டியது அவசியம். 
கடந்த 6-7 மாதங்களில் அதிகரித்து வரும் சீர்திருத்தங்களின் வேகத்தை அனைவரும் கவனித்திருக்கலாம். வேளாண்மை, விண்வெளி, ராணுவம், பயணிகள் விமானம், தொழிலாளர் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

அடுத்த பத்தாண்டு இந்தியாவுக்கானது. அதை இலக்காகக் கொண்டு, நாட்டின் கோடான கோடி இளைஞர்களின் நலனுக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் அடித்தளத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே நிகழ் பத்தாண்டு இந்தியாவுக்கானதாக இருக்கும். நிகழ் பத்தாண்டு இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைத் தந்துள்ளன.

கடந்த காலங்களில் ஒருசில சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அவை மற்ற துறைகளை ஒதுக்கிவிட்டு, ஒரு துறை சார்ந்ததாக மட்டுமே இருந்தது.

ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் பல்துறைகளில் பல்வகை சீர்திருத்தங்கள் நடந்துள்ளன. தேசியக் கல்விக் கொள்கை, நமது கல்வித் துறையின் எதிர்காலத்தை உறுதி செய்வதாக இருந்தால், வேளாண்சார் சீர்திருத்தங்கள் விவசாயிகளை வலிமையானவர்களாக மாற்றக் கூடியதாகவும், தொழிலாளர் சீர்திருத்தங்கள்-தொழிலாளர்கள்- நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்து வளர்ச்சிக்கான உந்து சக்தியாகவும் உள்ளன.

நேரடி பணப் பரிமாற்றம், பொது விநியோக முறையில் சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளது. மனைத் தொழில் ஒழுங்காற்று ஆணையத்தால் (ரேரா), வீடு வாங்குவோருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. 

சிக்கலான பல வரிகளுக்கு மாற்றாக சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டு வரப்பட்டதைப் போல, வரி செலுத்துவோரின் நலனுக்காக முகமறியா மதிப்பீடு (ஃபேஸ்லெஸ் அசெஸ்மென்ட்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, புதிய திவால் சட்டம், வெளிநாட்டு நேரடி முதலீட்டு சீர்திருத்தங்களும் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமாக இருந்துள்ளன.

21-ஆம் நூற்றாண்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 5-6 ஆண்டுகளில் நமது மாணவர்களுக்கு உதவும் வகையில் நாட்டின் கல்வி முறையில் நிலையான முயற்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, உயர்கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

உள்கட்டமைப்பு மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்ட உயர்கல்வித் துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவை உலகின் உயர்கல்வி மையமாக உருவாக்க அனைத்து நிலைகளிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கடந்த 6 ஆண்டுகளில் இந்திய தொழில்நுட்ப கழகங்கள் (ஐஐடி), இந்திய தகவல் தொழில்நுட்ப கழகங்கள் (ஐஐஐடி), இந்திய மேலாண்மை மையங்கள் (ஐஐஎம்), அகில இந்திய மருத்துவ அறிவியல் மையங்கள் (எய்ம்ஸ்) உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

புதிய கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கு மட்டுமல்லாது, அவற்றின் ஆளுமையிலும் கவனம் செலுத்தப்படுவதோடு, பாலின மற்றும் சமூக பாகுபாடற்ற பங்களிப்பையும் உறுதி செய்துள்ளோம். இதற்காக அந்தக் கல்வி நிலையங்களுக்கு கூடுதல் தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை அமல்படுத்துவதற்காகவே மருத்துவக் கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மைசூரு பல்கலைக்கழகத்தின் சாதனை: மைசூரு பல்கலைக்கழகம் மற்றும் அது படைத்துள்ள சாதனைகள் பாராட்டுதற்குரியது. இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பதில் மைசூரு மாமன்னர் நான்காம் கிருஷ்ணராஜ உடையார், அன்றைய திவான் சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் தொலைநோக்கு நினைவு கூரத்தக்கதாகும்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் பேசிய மாமன்னர் கிருஷ்ணராஜ உடையார், பெண் பட்டதாரிகள் அதிகமிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் விளைவாக, கல்வியின் அனைத்து நிலைகளிலும் சேர்க்கை பெறுவோரின் எண்ணிக்கையில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் காணப்படுகிறார்கள். உயர்கல்வியைச் சார்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம்: கல்வித் துறையில் நடைபெற்று சீர்திருத்தங்களுக்கு புதிய தேசியக் கல்விக் கொள்கை முக்கிய உந்துசக்தியாக இருக்கும். இளைஞர்களை அதிகம் போட்டித் திறன் கொண்டவர்களாக மாற்றுவதற்கு கல்வி முறையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. திறனடைதல், மறுதிறனடைதல், திறன் பெருக்குதல் தான் இன்றைய தேவை. 

கர்நாடக மக்களுக்கு தசரா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த காலத்தைப் போல விழாக்கால உணர்வு மங்காதிருக்கும். 

அண்மையில் பெய்த மழையால் கர்நாடகத்தின் பல பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு, பண்டிகை உணர்வை பாதித்திருக்கும். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆதரவு இருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன என்றார். 

நிகழ்ச்சியில், ஆளுநர் வஜுபாய்வாலா, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT