இந்தியா

பாலியா துப்பாக்கிச் சூடு சம்பவம்: கைதான பாஜக நிர்வாகி சிறையிலடைப்பு

DIN


பாலியா: உத்தர பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பாலியா மாவட்டத்தில் உள்ள துர்ஜன்பூர் கிராமத்துக்கு நியாயவிலைக் கடை ஒதுக்கீடு செய்வதற்காக சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. துணை மாஜிஸ்திரேட் தலைமையில், போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுய உதவிக் குழுவினருக்கு இடையே மோதல் உருவானது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி தீரேந்திர பிரதாப் சிங், குழுமியிருந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் பல்காமா (46) உயிரிழந்தார். 

போலீஸார் முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்றதை அடுத்து 3 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 9 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த தீரேந்திர பிரதாப் சிங்கை சிறப்பு அதிரடிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, தீரேந்திர பிரதாப்பிடம் டிஐஜி சுபாஷ் சந்திர துபே விசாரணை நடத்தினார். அப்போது, கூட்டத்தில் நடைபெற்ற மோதலையடுத்து தற்காப்புக்காகவே துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்த தீரேந்திர பிரதாப் சிங், தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆயுதத்தை போலீஸார் பறிமுதல் செய்ய உதவுவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

இதற்கிடையே தீரேந்திர பிரதாப்புக்கு பைரியா தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் போலீஸார் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள உள்ளூர் பாஜகவினர், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

தீரேந்திர பிரதாப் சிங் அளித்துள்ள புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT