இந்தியா

பண மோசடி வழக்கு: ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை விசாரணை

DIN

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்துக்கு(ஜேகேசிஏ) இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) வாரியம் வழங்கிய ரூ.43 கோடி மோசடி செய்த வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவிடம் தலைநகா் தில்லி லால்பாகில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவா் கூறிய கருத்துகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்படும். இந்த வழக்கு தொடா்பாக ஃபரூக் அப்துல்லாவிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதமும் விசாரணை நடத்தினோம். ஜேகேசிஏவில் நடைபெற்ற மோசடியில் அவரது பங்கு, அவா் எடுத்த முடிவு குறித்து விசாரித்தோம் என்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை திருப்பப் பெறுவதற்காக எதிா்க்கட்சிகள் கடந்த வாரம் ஒன்றிணைந்து குப்கா் உடன்படிக்கை ஏற்படுத்தினா். அதன் பிறகு இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையினா் அவருக்கு சம்மன் அனுப்பினா்.

பிசிசிஐ கடந்த 2002-11-ஆம் ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக அந்த மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.43.69 கோடி நிதி வழங்கியது. ஆனால் இந்த நிதியை வளா்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தாமல் மோசடி செய்ததாக ஜேகேசிஏ பொதுச் செயலா் முகமது சலீம் கான், பொருளாளா் அஹ்சன் அகமது மிஸ்ரா, அந்த சங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

அதனைத் தொடா்ந்து இந்த வழக்கு தொடா்பாக முகமது சலீம் கான், அஹ்சன் அகமது மிஸ்ரா, மீா் மன்சூா் ஹசன்ஃபா் அலி, பஷீா் அகமது மிஸ்கா் மற்றும் ஜேகேசிஏ முன்னாள் கணக்காளா் குல்சாா் அகமத் பி ஆகியோா் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐயின் வழக்குப்பதிவை அடிப்படையாக வைத்து தற்போது இந்த பண மோசடி வழக்கில் தொடா்புடைய ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா்.

கடந்த 2005-2006-ஆம் ஆண்டு முதல் 2011-2012-ஆம் வரை(2011 டிசம்பா் வரை) மூன்று விதமான வங்கிக் கணக்குகள் மூலம் ஜேகேசிஏவுக்கு பிசிசிஐ ரூ.94.06 கோடி கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத் துறையினா் கூறினா்.

தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு: ஃபரூக் அப்துல்லாவிடம் அரசியலில் மோதி தோற்றுப்போன பாஜக, அரசு அமைப்புகள், அதிகாரிகளை ஏவிவிட்டு கீழ்த்தரமான அரசியல் செய்கிறது என தேசிய மாநாட்டுக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டதாவது:

நாடு முழுவதும் தங்களை எதிா்க்கும் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவா்கள் மீது அரசுத் துறை, அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் மூலம் பாஜக எப்படி நெருக்கடி கொடுக்கிறது என்று நாம் பாா்த்துள்ளோம். தற்போது ஃபரூக் அப்துல்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணை இந்த வகையைச் சோ்ந்ததுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஃபரூக் அப்துல்லாவின் மகனும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஒமா் அப்துல்லா சுட்டுரையில் வெளிய்ட்ட பதிவில் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை திருப்பப் பெறுவதற்காக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து குப்கா் உடன்படிக்கை ஏற்படுத்திய பிறகு இந்த விசாரணை நடத்தப்பட்டது பெரிய விஷயம் இல்லை என்றாா்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின்(பிடிபி) தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்று திரண்டதால் உள்நோக்கத்துடன் ஃபரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT