இந்தியா

கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை ரூ.100-ஐ எட்டும்

19th Oct 2020 04:31 PM

ADVERTISEMENT


சென்னை: மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக வெங்காயத்தின் வரத்துக் குறைந்ததால், கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.100-ஐ எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 1,250 டன் வெங்காயம் வரும். ஆனால், கடந்த ஒரு சில நாள்களாக 20 முதல் 30 லாரிகளில் 700 டன் வெங்காயம் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.80 வரை விற்பனையாகி வருகிறது.

வெங்காயம் உற்பத்தியாகும் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால், அண்டை மாநிலங்களுக்கு காய்கறிகள் மற்றும் வெங்காய விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் கோயம்பேடு மொத்த விற்பனை சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவும் குறைந்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்த வாரம் ரூ.50 என்ற அளவில் விற்பனையாகிவந்த வெங்காயத்தின் விலை தற்போது ரூ.80-ஐ எட்டிவிட்டது. இது இந்த வார இறுதிக்குள் ரூ.100 ஆக உயர்ந்து விடும் என்று கூறப்படுகிறது. 

வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கனமழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்படுவதால், தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்வதும், நவம்பர் இறுதியில் புதிதாக உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் சந்தைகளில் விற்பனைக்கு வரும் போது, விலை குறைவதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT