இந்தியா

கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு புதிய சிக்கல்? பெங்களூரு மருத்துவர்கள் கவலை

ENS


பெங்களூரு: கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மூளை மந்தம் ஏற்பட்டு ஏராளமானோர் சிகிச்சைக்கு வருவதாக பெங்களூரு பகுதியில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நினைவாற்றல் பிரச்னை, கவனக்குறைவு, எளிதாக செய்யும் பணிகளில் கூட கவனத்தை செலுத்த முடியாதது, களைப்பு, குழப்பமான மனநிலை போன்றவை தொடர்ந்து இருப்பதாக கரோனாவில் இருந்த மீண்ட பலரும் மருத்துவர்களை நாடுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

சில நோயாளிகளுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு மருத்துவரை நாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சக்ரா உலக மருத்துவமனையின் மருத்துவர் டி.ஆர். ஹேம்குமார் கூறுகையில், 40 வயதில் இரண்டு பேர் சிகிச்சைக்காக வந்தார்கள். முன்பெல்லாம் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்ததாகவும், ஆகஸ்ட் மாதம் கரோனா பாதித்து சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு, செப்டம்பர் மாதத்தில் நினைவுத்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

வேலை செய்வது, புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பது போன்றவற்றை எளிதாக செய்து வந்த அவர்களால், தற்போது எளிதாக படிக்கவும் எழுதவும் கூட முடியவில்லை என்கிறார் மருத்துவர்.

ஆர்.வி. மருத்துவமனை மருத்துவர் ஆஸ்தெர், கரோனாவில் இருந்து மீண்டவர்கள் ஓரிரு மாதங்கள் கழித்து, நினைவுத் திறன் பாதித்தல், மயக்கம், மனக்குழப்பம், அதிக சோர்வு போன்ற நோய்களுடன் மீண்டும் மருத்துவர்களை நாடி வருகிறார்கள். மூட்டுகளில் பலவீனம் ஏற்பட்டு நடக்க முடியாதது போன்ற காரணங்களுக்காக கரோனாவில் இருந்து மீண்டவர்கள் கடந்த ஒரு சில வாரங்களில் அதிகமாக வருவதாகவும் கூறுகிறார்.

உலகம் முழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், இதற்கு சரியான காரணம் கண்டறியப்படவில்லை.

இது குறித்து மருத்துவர்  ஹேம்குமார் கூறுகையில், இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கலாம், அதாவது அந்த வைரஸால் மூளையின் வடிவமைப்பு அல்லது செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்.

மேலும், கரோனா பாதித்து, உடலுக்குள் குறைவான ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்ள நேரிட்டபோது மூளைத் திறனில் ஏற்பட்ட பாதிப்பால் இந்த குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

தற்போது இதற்கென சிறப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை, இந்த சிக்கல் எத்தனை நாள்களுக்கு இருக்கும் என்பது குறித்தும் தெரியவரவில்லை. இது நமக்கு புதிய சவால், தற்போதைக்கு சத்து மாத்திரைகள் மூலமே தீர்வு கண்டு வருகிறோம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT