இந்தியா

விவசாயக் கடன்கள் தள்ளுபடி: பிகார் தேர்தலில் மெகா கூட்டணி வாக்குறுதி

17th Oct 2020 04:33 PM

ADVERTISEMENT


பிகார் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி வாக்குறுதி அளித்துள்ளது.

பிகாரிலுள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

மெகா கூட்டணி சார்பாக கூட்டாக இன்று (சனிக்கிழமை) தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்குத் தேவையான கட்டண செலவை அரசே ஏற்கும், மாநில அரசில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. 4.5 லட்சத்துக்கும் மேலான ஒப்பந்த ஆசிரியர்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவரும், மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது:

"நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் ஏறத்தாழ 60 முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. வேலையின்மை மற்றும் வறுமைக்கான திட்டம் குறித்து பேசாமல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத் மீது குற்றம்சாட்டுவதிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி முனைப்பாக உள்ளது.

எனக்கு தற்போது 31 வயது. நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையில் இது சரிபாதி. ஆனால், மக்களுக்காக எப்படி பணியாற்ற வேண்டும் என்பதில் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளேன். என்னுடைய 26 வயது முதல் நான் குறிவைக்கப்படுகிறேன். பல்வேறு விசாரணை அமைப்புகளைச் சந்தித்துள்ளேன். ஆனால் நான் துணை முதல்வராக இருந்தபோது மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்.

எனக்கு அனுபவம் இல்லையென்றால், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு என்னை ஏன் துணை முதல்வராக நியமிக்க வேண்டும்."

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்ததாவது:

"பாஜக 3 கூட்டணி வைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்துடன் வெளிப்படையாக, இரண்டாவதாக அசாதுதின் ஒவைசி தலைமையிலான கூட்டணி வைத்துள்ளது, மூன்றாவதாக திரைக்குப் பின்னால் எல்ஜேபியுடன் கூட்டணி வைத்துள்ளது."
 

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT