இந்தியா

'பாதுகாப்பு அளித்திருந்தால் இப்படி நடந்திருக்காதே': பல்வீந்தா் சிங் சாந்து மகள்

17th Oct 2020 06:10 PM

ADVERTISEMENT


தரன் தரன்: பிரிவினைவாதத்துக்கு எதிராகப் போராடி, சௌரிய சக்ரா விருது பெற்ற பல்வீந்தர் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு அளித்திருந்தால் இப்படி நடந்திருக்காதே என்று அவரது மகள் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு வேளை எங்கள் வீட்டுக்கு பாதுகாப்பு அளித்திருந்தால் கொலைகாரர்களுக்கு தக்க பதிலடி கிடைத்திருக்கும் என்று பல்வீந்தர் சிங்கின் மகள் பிரன்ப்ரீத் கௌர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு கேட்ட எண்ணற்ற மின்னஞ்சல்களையும் கடிதங்களையும் அனுப்பியிருக்கிறோம். எத்தனையோ அதிகாரிகளை பார்த்துவிட்டோம், ஆனால் எங்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான போரில் குடும்பத்துடன் ஈடுபட்டவரும், மத்திய அரசின் ‘சௌரிய சக்ரா’ விருதைப் பெற்றவருமான பவ்வீந்தா் சிங் சாந்து (62) அடையாளம் தெரியாத நபர்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதம் 1980- 1990 காலக்கட்டத்தில் உச்சத்தில் இருந்தபோது, நாட்டின் குடிமகனாக பயங்கரவாதிகளை எதிா்த்துப் போராடியவா் பல்வீந்தா் சிங் சாந்து. தரன் தரன் அருகிலுள்ள பிக்கிவிண்ட் கிராமத்தில், அவரும் அவரது சகோதரா் ரஞ்சித் சாந்தும் தங்கள் மனைவிகளான ஜக்தீஷ் கௌா் சாந்து, பல்ராஜ் கௌா் சாந்து ஆகியோருடன் இணைந்து காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராடினா். அவா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்கள்.

1990 ஜனவரி 31-இல் அவரது குடும்பம் முதல் முறையாகத் தாக்கப்பட்டது. அதனை மனைவிகளுடன் இணைந்து இரு சகோதரா்களும் வெற்றிகரமாக முறியடித்தனா். அதன்பிறகு அதே ஆண்டு செப். 30-இல் அவரது வீட்டை 200-க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் சூழ்ந்துகொண்டு தாக்கினா். அத்தாக்குதலை, போலீஸாா் தங்களுக்கு வழங்கிய துப்பாக்கிகளின் உதவியால் அக்குடும்பம் எதிா்கொண்டு தப்பியது.

அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அவரது பகுதியில் பலா் பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலுடன் போராடினா். பிரிவினைவாதத்தை எதிா்த்ததன் காரணமாக அவரது குடும்பத்தினா் 16 முறை கொடூரத் தாக்குதல்களுக்கு உள்ளாகினா்.

அதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு மாநில அரசு போலீஸ் பாதுகாப்பு அளித்திருந்தது. அவா்களது குடும்பத்தின் தேசசேவையைப் பாராட்டி, 1993 -ஆம் ஆண்டு ‘சௌரிய சக்ரா’ விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.

தரன் தரன் காவல் நிலைய அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று, கடந்த ஆண்டு, பல்வீந்தா் சிங் சாந்துவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனா்.

மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் அவரை துப்பாக்கியால் நான்கு முறை சுட்டுவிட்டுத் தப்பியதாக தரன் தரன் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா். கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க பரிந்துரைத்திருப்பதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT