இந்தியா

'தந்தை சுமைதூக்கும் தொழிலாளி': சிறுமியை குடும்பத்துடன் சேர்க்க உதவிய ஒரே ஒரு துப்பு

16th Oct 2020 03:45 PM

ADVERTISEMENT

புது தில்லி: குடும்பத்தை விட்டு பிரிந்து அரசு காப்பகத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமியை, அவரது குடும்பத்துடன் சேர்ப்பிக்கக் கிடைத்ததோ ஒரே ஒரே துப்புதான்.. என் தந்தை ஒரு சுமைதூக்கும் தொழிலாளி.

தில்லி காவல்துறையின் மனித கடத்தல் தடுப்புப் பிரிவினர், அந்த சிறுமியிடம் நடத்திய பல்வேறு கட்ட உரையாடல்களுக்கு இடையே அவர்களுக்குக் கிடைத்தது மேற்சொன்ன ஒரே ஒரு துப்புதான்.

பஞ்சாப் மாநிலம் லூதியாணாவைச் சேர்ந்த அந்த சிறுமியை, அவரது பெற்றோருடன் சேர்ப்பிக்க, காவல்துறையினர் கடும் முயற்சியை மேற்கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், அக்டோபர் 1-ம் தேதி துக்ளக்பாத்தில் உள்ள பிரயாஸ் சிறுவர் உதவி மையத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்க மனித கடத்தல் தடுப்புப் பிரிவினர் சென்றனர். அங்கு, புது தில்லி ரயில் நிலையத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு அனாதையாக மீட்கப்பட்டு தற்போது 17 வயதாகும் சிறுமியையும் அந்தக் குழுவினர் சந்தித்தனர்.

அவரிடம் பேச்சுக்கொடுத்ததில், அவர் 8 ஆண்டுகளாக இந்த மையத்தில் வாழ்ந்து வருவதும், அவர் லூதியாணாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலதிகத் தகவல்களை சிறுமியால் சொல்ல முடியவில்லை.

ADVERTISEMENT

அந்த சிறுமியின் பெற்றோரைக் கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவே, இதில் தீவிர கவனம் செலுத்த காவல்துறையினர் முடிவு செய்தனர். சிறுமியிடம் தொடர்ந்து பேசியதில், அவரது தந்தை லூதியாணா ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தார் என்பது தெரிய வந்தது.

உடனடியாக லூதியாணா ரயில் நிலையத்தின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் அவரது அடையாளங்களை தெரிவித்தனர். ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

அதன்பின்பு, அவ்வப்போது லூதியாணா ரயில் நிலையத்தில் இது தொடர்பான அறிவிப்பு ஒலிப்பெருக்கி வாயிலாக சொல்லப்படுவதும், அங்குள்ள சுமை தூக்கும் தொழிலாளிகளின் விவரங்கள் ஆராயப்படுவதும் என தேடுதல் தொடர்ந்தது.

காவல்துறையின் தனிப்படை ஒன்று, லூதியாணா ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களிடம் நேரடியாகவும் விசாரித்துப் பார்த்தனர். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

இறுதியாக, லூதியாணா ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் டிக்கெட் பரிசோதகர் லகான் லால் மீனாவுக்கு, அந்த சிறுமியின் தந்தை வெகு நாள்களுக்கு முன்பாகவே இந்த ரயில் நிலையத்தில் கூலி வேலையை விட்டுவிட்டு, ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள தாபாவில் வேலை செய்யச் சென்றது தெரிய வந்தது. உடனடியாக லூதியாணாவில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியின் தந்தை கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரிடம், சிறுமியின் புகைப்படத்தைக் காட்டியதும், அது தனது காணாமல் போன மகள்தான் என்று சரியாக அடையாளம் காட்டினார். தனது கோபத்தால்தான், மகள், வீட்டை விட்டு வெளியேறியதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

தற்போது, அந்தச் சிறுமி தனது பெற்றோருடன் செல்வதற்குத் தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தில்லி காவல்துறை அதிகாரி ஆர்.பி. மீனா கூறியுள்ளார்.
 

Tags : hot news special news
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT