இந்தியா

இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 47 சதவீதம் பேர் 60 வயதுக்கும் குறைவானவர்கள் 

14th Oct 2020 01:46 PM

ADVERTISEMENT


புதுதில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் 47 சதவீதம் பேர் 60 வயதுக்கும் குறைவானவர்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63,509 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளன. இதனால் மொத்த பாதிப்பு 72,39,390 -ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 730 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,10,586 ஆக அதிகரித்தது. உயிரிழப்போர் சதவீதம் 1.53 ஆக குறைந்துள்ளது. 

அதே கால அளவில் 74,632 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 63,01,928-அதிகரித்தது. அதாவது, 87.05 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 8,26,876 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 11.42 சதவீதமாகும் என்று மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் 47 சதவீதம் பேர் 60 வயதுக்கும் குறைவானர்கள் என்றும், தொற்று பாதித்த 70 சதவீதம் பேர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் 30 சதவீதம் பேர் என தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

உயிரிழந்தவர்களில் சுமார் 53 சதவீதம் பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்று அவர் கூறினார், முதியவர்கள் மற்றும் பிற நோய் பாதிப்பு உள்ளவர்களே அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

"மேலும், 45-60 வயதுக்குட்பட்டவர்களில் 35 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர், 26-44 வயதுக்குட்பட்டவர்களில் 10 சதவீதம் பேரும், 18-25 வயதுக்குட்பட்டவர்களில் 17 சதவீதம் பேரும், 17 வயதுக்குக் குறைவானவர்கள் தலா 1 சதவீதம் பேரும்  உயிரிழந்துள்ளனர்" என்று பூஷண் கூறினார்.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே, தொற்று பாதித்தவர்களில் 24.6 சதவீதம் பேருக்கு பிற பாதிப்புகள் இருப்பதாகவும், 4.8 சதவீதம் பேருக்கு பிற பாதிப்புகள் இல்லை என்றும் அவர் கூறினார்.

45-60 வயதுக்குட்பட்டவர்களில், தொற்று பாதித்தவர்களில் 13.9 சதவீதம் பேருக்கு பிற பாதிப்புகளும், 1.5 சதவீதம் பேருக்கு பிற பாதிப்புகள் இல்லை.

45 வயதிற்குட்பட்ட நோயாளிகளில், பிற பாதிப்பு உள்ளவர்களில் 8.8 சதவீதம் பேரும்,  0.2 சதவீதம் பேருக்கு பிற பாதிப்புகள் இல்லை.

தொற்று மற்றும் பிற பாதிப்பால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த உயிரிழப்பு 17.9 சதவீதமாகவும், பிற பாதிப்பு இல்லாதாவர்களில் 1.2 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்  திரு பூஷண் கூறினார்.

ஒட்டுமொத்த, வாராந்திர மற்றும் தினசரி கரோனா நோய்த்தொற்று பாதிப்போரின் சதவீகிதம் குறைந்துள்ளதாகவும், இது முறையே 8.07 சதவீதம், 6.24 சதவீதம் மற்றும் 5.16 சதவீதமாக உள்ளது.

"செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 15 வரை 8.50 சதவீதமாக இருந்த தினசரி தொற்று பாதிப்பு, அக்டோபர் 7 முதல் அக்டோபர் 13 வரை 6.24 சதவீதமாகக் குறைந்துள்ளது." 

நாடு முழுவதும் 8,38,729 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 11.42 சதவீதமாகும். தொற்று பாதிப்பு தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஒன்பது லட்சத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. 

மேலும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் தொற்று பாதிப்பு விகிதமும் தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. தினசரி சராசரியாக 11,36,000 பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பத்து லட்சத்துக்கும் அதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார செயலர் மேலும் தெரிவித்தார்.

"தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வருகின்ற போதிலும், அதிக எண்ணிக்கையிலான பரிசோதனையின் அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம்," என்று அவர் கூறினார்.

கடந்த ஐந்து வாரங்களாக தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக சுட்டிக்காட்டிய பூஷண், தினசரி பாதிப்புகளின் வாராந்திர சராசரி பாதிப்பு செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் 92,830 ஆக இருந்தது, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் 70,114 ஆக குறைந்தது.

குளிர்காலத்தின் வருகையால் பல நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், வரவிருக்கும் திருவிழாக்கள் மற்றும் குளிர்காலங்களை கருத்தில் கொண்டு, முகக்கவசங்களை அணிந்துகொள்வது மற்றும் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார் நிதி ஆயோக் உறுப்பினர் (உடல்நலம்) டாக்டர் வி.கே. பவுல்.

பல நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பின் இரண்டாவது கட்ட உச்சம் காணப்படுவதை அடுத்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய பவுல், சிலர் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைப் பின்பற்றுவதில் அக்கறையின்றி செயல்படுகிறார்கள் என்று கூறினார்.

கரோனா வைரஸ் ஒரு சுவாச வைரஸ் என்றும், இந்த வைரஸ் குளிர்காலத்தில் அதிகம் தாக்குவதாகவும், குளிர்காலத்தில் சுவாச நோய்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்தவர், எதிர்வரும் குளிர்கால மாதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் நிமோனியா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்த்தொற்றுகளுக்கு மக்கள் அதிகம் ஆளாக நேரிடும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் முகக்கவசங்களை கட்டாயமாக அணிந்தும் கூட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு வேண்டுகோள் விடுத்த பவுல், இதன் மூலம் நோய்த்தொற்று பரவலை 36-50 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும் என்று அறிவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Tags : COVID-19 Deaths
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT