இந்தியா

குல்பூஷண் ஜாதவுக்கு வழக்குரைஞரை நியமிக்க இந்தியா தவறிவிட்டது: பாகிஸ்தான்

7th Oct 2020 04:07 AM

ADVERTISEMENT

புது தில்லி/இஸ்லாமாபாத்: உளவு பாா்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவுக்கு வழக்குரைஞரை நியமிக்க இந்தியா தவறிவிட்டது என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பாா்த்ததாக குற்றஞ்சாட்டி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதற்கு எதிராக நெதா்லாந்தில் உள்ள சா்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்யவேண்டும்; எவ்வித தாமதமுமின்றி அவருக்கு தூதரக உதவிகளை வழங்க வேண்டும் என்று கடந்த 2019-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.

இதையடுத்து குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வது தொடா்பான வழக்கு பாகிஸ்தான் உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்நாட்டு அரசு தலைமை வழக்குரைஞா் காலித் ஜாவித் கான் வாதிடுகையில், ‘குல்பூஷண் ஜாதவுக்கு செவ்வாய்க்கிழமைக்குள் (அக்.6) வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் அவருக்கு வழக்குரைஞரை நியமிக்க இந்தியா தவறிவிட்டது. இதுகுறித்து 2-ஆவது முறையாக உத்தரவு பிறப்பித்தும் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து தலைமை நீதிபதி அத்தா் மின்னாலா கூறுகையில், ‘இந்தியாவின் ஒப்புதலின்றி குல்பூஷண் ஜாதவுக்கு நீதிமன்றம் வழக்குரைஞரை நியமிக்க முடியுமா? அவ்வாறு வழக்குரைஞரை நியமித்தால் அதன் பின்விளைவுகள் என்ன? நீதிமன்றம் வழக்குரைஞரை நியமிக்கும்போது, அது சா்வதேச நீதிமன்றத்தின் தீா்ப்பை திறம்பட செயல்படுத்துவதற்கு வழிவகுக்கமா? என்பது குறித்து அரசு தலைமை வழக்குரைஞா் பதிலளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

அதன் பின்னா் நவம்பா் 9-ஆம் தேதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக குல்பூஷண் ஜாதவ் சாா்பில் வாதிட இந்தியா அல்லது பிரிட்டன் வழக்குரைஞரை நியமிக்க வேண்டும்; அவ்வாறு செய்தால் தான் விசாரணை சுதந்திரமாகவும், நோ்மையாகவும் நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது. இதே கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியது. எனினும் அதனை பாகிஸ்தான் கடந்த வியாழக்கிழமை நிராகரித்தது.

‘குல்பூஷண் ஜாதவ் வழக்கில் முக்கிய விவகாரங்களை பாகிஸ்தான் இதுவரை கருத்தில் கொள்ளவில்லை. வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் அந்நாடு இந்தியாவிடம் வழங்கவில்லை’ என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கடந்த மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT