இந்தியா

ஹாத்ரஸ் வழக்கு உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை: சிரோன்மணி அகாலி தளம் வலியுறுத்தல்

3rd Oct 2020 09:57 PM

ADVERTISEMENT

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்த சிரோன்மணி அகாலி தளம் வலியுறுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பா் 14-ஆம் தேதி தலித் பெண்ணை நான்கு இளைஞா்கள் கடத்தி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்தனா். நான்கு பேரில் ஒருவா் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தபோது, அவா் தனது நாக்கை கடித்ததால் துண்டானது. பின்னா் அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மீடக்கப்பட்டு அலிகரில் உள்ள மருத்துவமனையில் கை, கால்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்றாா். 

அதைத்தொடர்ந்து தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் இருந்தபோது செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் இறந்தார். இறந்த பெண்ணின் உடலை, அவரது குடும்பத்தாரிடம் கொடுக்காமல் இரவோடு இரவாக காவல்துறையினரே தகனம் செய்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த சம்பவத்தைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்றன.

இதையடுத்து இந்த விவகாரத்தில் ஹாத்ரஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட ஐந்து காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் வழக்கை சிபிஐக்கு மாற்றி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் கூறுகையில், இறந்த பெண்ணின் உடலை குடும்பத்தாரிடம் கொடுக்காமல் காவல்துறையினரே தகனம் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இது கண்டனத்திற்குரியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தலித்துகள், அரசு மீதான நம்பிக்கையை இழப்பார்கள் என்றார்.

Tags : Uttarpradesh
ADVERTISEMENT
ADVERTISEMENT